அரியலூர் : தொழில் நிறுவனங்கள் மானிய உதவிகளைப் பெற கலெக்டர் அறிவிப்பு
புதிய தொழில் கொள்கையின் கீழ் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையின் கீழ் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்,
மாநிலத்தின் முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அரசு புதிய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, மாநிலத்தில் அமைக்கப்படும் குறு நிறுவனங்கள் தகுதி வாய்ந்த இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம், அதிகபட்சமாக, ரூ.25 லட்சம் மூலதன மானியமும், கூடுதல் முதலீட்டு மானியமாக இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 10 சதவீதம், அதாவது ரூ.5 லட்சம் வரை 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
36 மாதங்களுக்கு மின் கட்டணங்களின் 20 சதவீதம் திருப்பி வழங்கப்படும். பின்தங்கிய வட்டத்தில் நிறுவப்பட்ட சிறு, நடுத்தர உற்பத்தி நிறுவனம், விவசாயம் சாந்த நிறுவனங்கள் தகுதிவாய்ந்த இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் மூலதன மானியமும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களால் நிறுவப்பட்ட நிறுவனங்களின் இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 5 சதவீதமும் கூடுதல் மூலதன மானியமாக அதிகபட்சம் ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
மின்சார, மின்னணுவியல் தொழில், தோல், தோல் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், மருந்துகள், மருந்தியல் பொருள்கள், சூரிய சக்தி உபகரணங்கள், தங்க வைர நகை ஏற்றுமதி, மாசுக்கட்டுபாட்டு உபகரணங்கள், விளையாட்டுப் பொருள்கள், சாதனங்கள், செலவு குறைந்த கட்டுமானப்பொருள்கள், ஆயத்த ஆடைகள் சார்ந்த தொழில் உள்ளிட்ட 23 சிறப்பு வகை உற்பத்தி நிறுவனங்களுக்கு தகுதிவாய்ந்த இயந்திர தளவாடங்களின் மதிப்பில், 25 சதவீத அளவில் சிறப்பு மூலதன மானியம் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வழங்கப்படும்.
20 நபருக்கு மேல் பணியாற்றும் தொழில் நிறுவனங்கள் தாங்கள் செலுத்திய ஊழியரின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பில் ஒரு நபருக்கு ரூ.24 ஆயிரம் வீதம் உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து முதல் 3 ஆண்டுகளுக்கு திருப்பி வழங்கப்படும்.
கிராமப்புற பகுதியிலுள்ள அனைத்து புதிய, செயல்பாட்டில் இருக்கும் குறு உற்பத்தி நிறுவனங்கள் புதிய 320 கேவிஏ திறனுள்ள மின்னாக்கிகளை வாங்கும்போது, அதன் மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.
எம்எஸ்எம்இ தயாரிப்புகளுக்கு இந்திய தரச்சான்றிதழ் (பிஐஎஸ்), பூஜ்ஜிய குறைபாடு, பூஜ்ஜிய விளைவு (இசட்இடி) மதிப்பீடு அல்லது இந்தியாவிலுள்ள அதிகார அமைப்பால் அங்கீகரிக்கபட்ட சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெற செலவிட்ட தெகையில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
பின் தங்கிய வட்டம், பகுதிகளில் நிறுவப்படும் குறு, சிறு நிறுவனங்கள் செலுத்தும் முத்திரைத்தாள் பதிவுகட்டணத்தில் அதிகபட்சம் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படும். காப்புரிமை பதிவுக்கான விண்ணப்பக்கட்டணத்தில் 75 சதவீதம், அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
வர்த்தக முத்திரை பதிவு கட்டணத்தில் அல்லது புவிசார் குறியீட்டு பதிவு கட்டணத்தில் 50 சதவீதம், அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் பொது மேலளார், மாவட்ட தொழில் மையம், அரியலூர் அலுவலகத்தையோ அல்லது 89255-33925, 04329-228555 என்ற எண்களையோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.