அரியலூர் மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி துவக்கம்
அரியலூரில் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி திட்டம் துவக்கப்பட்டது. நுகர்வோர் ஆணையத்தில் நீதியரசர் சுப்பையா ஆய்வு நடத்தினார்.
அரியலூரில் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி திட்டம் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணைய நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் பேசும்போது
1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நீக்கப்பட்டு நுகர்வோர் உரிமைகளை சிறப்பாக பாதுகாக்கும் வகையில் வலுப்படுத்தப்பட்ட புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் நுகவோரின் உரிமைகள் எவை? நுகர்வோருக்கு ஏற்படும் பிரச்சனைகள் எவை? நுகர்வோர் எவ்வாறு நுகர்வோர் ஆணையத்தை அணுகுவது? நுகர்வோர் ஆணையங்கள் எத்தகைய தீர்வுகளை வழங்கும் அதிகாரங்களை கொண்டுள்ளன? என்பவற்றை அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்.
இதற்காக அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தின் வேண்டுகோளின்படி, அரியலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் அரியலூர் மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி பட்டறைகளை நடத்தும் திட்டமானது தமிழகத்திலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலத்தில் பத்தாயிரம் நபர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
விற்பனை மற்றும் சேவை வழங்கும் அரசு துறை அலுவலர்களுக்கும் மற்ற அரசு துறை அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட உள்ளது. இதைப் போலவே வங்கி, காப்பீடு, மினசாரம், வணிக அமைப்புகள் உள்ளிட்ட சேவை மற்றும் விற்பனை தொடர்புடைய நிறுவனங்களுன் அலுவலர்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட உள்ளது. பின்னர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இப் பயிற்சி வழங்கப்படும் என்றார்.
இப்பயிற்சி பட்டறையில் அரியலூர் மாவட்டத்தில் பணியாற்றும் துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். இறுதியாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை நன்றியுரை ஆற்றினார்.
இந்நிலையில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்திற்கு வருகை புரிந்த அரியலூர் மாநில நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஆர் சுப்பையா அங்கு ஆய்வு நடத்தினார். அவரை அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணைய நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர்களர் பாலு, லாவண்யா, மாவட்ட முதன்மை நீதிபதி மகாலட்சுமி, சட்ட மன்ற உறுப்பினர் கு. சின்னப்பா, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் ஜெயகுமார் மற்றும் வழக்கறிஞர்கள் வரவேற்றனர்.