அரியலூர் வட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் 3ம் நாள் ஜமாபந்தி
நிலஅளவை அலுவலர் பயன்படுத்தும் கருவிகளை உரிய முறையில் பராமரிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் 1431-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் அரியலூர் வட்டத்திற்கான மூன்றாம் நாள் ஜமாபந்தி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (16.06.2022) நடைபெற்றது.
இதில், 1431-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் மூன்றாம் நாளில் கீழப்பழுவூர் உள்வட்டத்திற்குட்பட்ட மல்லூர், வாரணவாசி, பார்பனச்சேரி, பூண்டி, மேலப்பழுவூர், கீழையூர், கீழப்பழுவூர், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூர், சன்னாவூர் (வடக்கு), சன்னாவூர் (தெற்கு), பளிங்காநத்தம், கரையவெட்டி, கீழக்காவட்டாங்குறிச்சி, வெற்றியூர் உள்ளிட்ட 16 கிராம பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 390 மனுக்கள் பெறப்பட்டது.
இம்மனுக்களை உரிய விசாரணை செய்து தீர்வுகாணவும், கிராம கணக்குகளை முறையாக பராமரிக்கவும், நிலஅளவை அலுவலர் பயன்படுத்தும் கருவிகளை பார்வையிட்டு, உரிய முறையில் பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.
மேலும், அரியலூர் வட்டத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் 17.06.2022 அன்று திருமானூர் உள்வட்டத்திற்குட்பட்ட கோவில் எசணை (மேற்கு), கோவில் எசணை (கிழக்கு), எலந்தக்கூடம், குலமாணிக்கம் (மேற்கு), குலமாணிக்கம் (கிழக்கு), கண்டிராதீர்த்தம், திருமழப்பாடி, அன்னிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர், வடுகபாளையம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் குமரையா, துணை வட்டாட்சியர்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.