அரியலூர் மாவட்டம் கங்கை கொண்டசோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியது.
கீழடி, ஆதிச்சநல்லூர்,சிவகளை மற்றும் கொடுமலையை தொடர்ந்து தற்போது தமிழகஅரசு மேலும் ஏழு இடங்களில் அகழ்வாராய்ச்சி பணி துவங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதில் கங்கைகொண்டசோழபுரம் பகுதியும் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள மாளிகைமேடு அகழ்வாராய்ச்சி நடைபெற்ற பகுதியை தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி இணை இயக்குநர் சிவானந்தம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவானந்தம், ஆளில்லா விமானம் மூலம் ஆராய்ச்சி பணி தொடங்கப்பட்டு உள்ளதாகவும், கங்கைகொண்டசோழபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள 6 இடங்களில் பிப்ரவரி இரண்டாம் வாரம் தரைப்பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கும். தேர்வு செய்யப்பட்ட இடங்களில் படிப்படியாக பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி அகழ்வாராய்ச்சி நடத்தப்படும். மேலும் கங்கை கொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள ஆயுதகளம், மண்மலை, மாளிகை மேடு உள்ளிட்ட 6 இடங்களில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெறும் என்று கூறினார்.