அரிசிக்கொம்பன் யானையும்...தேனி மாவட்ட மக்களும்...
தேனி மாவட்டத்தில் அரிசிக்கொம்பன் யானையால் உயிருக்கு ஆபத்து இருந்தும் கூட, அந்த யானையை ஒரு குழந்தையை போலவே நினைத்தனர்.;
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சின்னக்கானல் வனப்பகுதியில் பலத்த உயிர் சேதம் ஏற்படுத்திய, அரிசிக் கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் பிடித்து மேட்டமலை வனப்பகுதியில் விட்ட போது, தேனி மாவட்ட மக்கள் ஒட்டு மொத்தமாக வரவேற்றனர்.
மேட்டமலை மலைப்பகுதியில் விடப்பட்ட அரிசிக்கொம்பன் யானை மேகமலையில் குடியிருப்புக்குள் உலா வந்தது. இரவில் மேகமலை சென்ற பஸ்ஸை வழிமறித்தது. சுருளி வனப்பகுதியில் உலா வந்தது. கூடலுார், குமுளி, லோயர் கேம்ப் மலைப்பகுதியில் உலா வந்தது.
கம்பம் நகரில் 16 மணி நேரம் உலவியது. ஒருவர் உயிரிழக்க காரணமாகவும் அமைந்தது. அதன் பின்னர் ஆறு நாட்கள் வரை சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம், கூடலுாரை ஒட்டிய வனப்பகுதியில் உலா வந்தது. அந்த நேரங்களில் தேனி மாவட்டத்தின் பாதி குடியிருப்பு பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. அப்படியிருந்தும், தேனி மாவட்டத்தில் ஒருவர் கூட அரிசிக்கொம்பனை பிடித்துச் செல்லுங்கள். மாவட்டத்தை விட்டு வெளியேற்றுங்கள் எனக்கூறவில்லை. கோஷம் போடவில்லை. போராட்டம் நடத்தவில்லை. மாறாக அரிக்கொம்பனுக்கு முடிந்த அளவு உணவு வழங்குவதில் ஆர்வம் காட்டினர். வனத்துறை தான் அரிசிக்கொம்பனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என பதறியது. மக்களிடம் அரிசிக்கொம்பன் கொன்று விடுவானே என்ற பதற்றம் துளியும் இல்லை. குறிப்பாக சிலர் யானை மிதித்து இறந்தால் புண்ணியம் தானே என்ற உச்சகட்ட பக்தி மனப்பான்மையில் இருந்தனர்.
யானைக்கு எங்குமே எப்போதும் எதிர்ப்பு இல்லை. வன ஆர்வலர்களும், விவசாயிகள் சங்க தலைவர்களும், அரிசிக்கொம்பனை காப்பாற்றுங்கள், அதற்கு காயம் ஏற்பட்டு விட்டது. அதன் உணவுமுறையை மாற்றி பக்குவப்படுத்துங்கள் என்று தான் கோரிக்கை வைத்தனரே தவிர, அந்த யானையை இங்கிருந்து வெளியேற்றுங்கள் என எந்த ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை.
இவ்வளவுக்கும் அரிசிக்கொம்பனால் தேனி மாவட்டத்தில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இப்படி பக்குவப்பட்ட வனவிலங்குகள் மீது அதிகளவு பிரியம் கொண்ட, வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என அக்கரை கொண்ட மக்கள் அதிகம் வாழும் மண் தான் தேனி மாவட்டம். (ஓரிருவர் மாற்றுக் கருத்து தெரிவித்திருக்கலாம். அதனை கணக்கில் கொள்ள தேவையில்லை. மாவட்டத்தின் 90 சதவீதம் மக்கள் இன்னும் சொல்லப் போனால் 95 சதவீதம் மக்கள் அரிசிக்கொம்பன் யானையை வெறுக்கவில்லை. பயப்படவும் இல்லை.)
குறிப்பாக தேனி மாவட்ட பத்திரிக்கையாளர்கள், டிஜிட்டல் மீடியா பணியாளர்கள் யாரும் மக்களை மிரட்டும் வகையில் அச்சுறுத்தும் செய்திகள் எதையும் வெளியிடவில்லை. தவறான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று, மிகவும் நாகரீகமாக அக்கறையுடன் செய்திகளை எழுதினர். எந்த பத்திரிக்கையாளரும் அவதுாறு மற்றும் தவறான தகவல்களை வெளியிடவேயில்லை என்பதையும் கவனித்து வனத்துறையினரே பாராட்டினர்.
குறிப்பாக அரிசிக்கொம்பன் பிடிபட்ட நாளன்று தேனி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் அத்தனை பேரையும் வனத்துறை சிவப்பக்கம்பளம் விரித்து வரவேற்று, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் அவர்கள் தேவையான படம், வீடியோ எடுக்க பெரிய அளவில் உதவியது. இதற்கு பத்திரிக்கையாளர்கள் நடந்து கொண்ட விதமே காரணம்.
இந்த பாராட்டு முகவுரை எழுத காரணம், அரிக்கொம்பனை பிடித்து வனத்துறையினர் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று, கோதையாறில் இருந்து 13 கி.மீ., தொலைவில் உள்ள முத்துக்குளி வனப்பகுதியில் விட்டனர். அரிசிக்கொம்பனால் தேனி மாவட்ட குடியிருப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்பினை முழுமையாக அறிந்த வனத்துறையினர் மிகவும் தெளிவாக திட்டமிட்ட பின்னரே, அங்கு கொண்டு போய் விட்டுள்ளனர்.
இதனை சில வன மாபியாக்கள் துாண்டுதலின் பேரில், விவரம் அறியாத அப்பாவி மக்கள் சிலர் எதிர்த்து மறியலில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட அன்பான வரவேற்பினை உணர்ந்த வனத்துறை அதிகாரிகள், நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட எதிர்ப்பை கண்டதும் கொந்தளித்து விட்டனர். தனது கடுமையை வனத்துறை முதன்முறையாக இங்கு வெளிப்படுத்தியதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் பின்வாங்கினர். தற்போதும் அரிசிக்கொம்பன் யானை வனத்துறையின் கண்காணிப்பில் தான் இருக்கிறது. அதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத அளவுக்கு பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.