அரிசி கொம்பன் யானை தற்போது எங்கே உலாவுகிறது?

வண்ணாத்தி்ப்பாறை வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானையின் நடமாட்டம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.;

Update: 2023-05-04 01:07 GMT

அரிசிக் கொம்பன் யானையுடன் கேரள வனத்துறை. (பைல் படம்)

அரிசிக்கொம்பன் யானை முல்லைக்கொடி, மாவடி பகுதிக்குள் இடம் பெயர்ந்துள்ளதால் இப்போதைக்கு அபாயம் நீங்கியுள்ளது. கூடலூர் மக்கள் இனி கவலைப்பட ஏதுமில்லை. அரிசிக் கொம்பன் யானை வண்ணாத்திப்பாறை வனப்பகுதிக்குள் விடப்பட்டு இன்றோடு மூன்று நாட்கள் கழிந்திருக்கிறது.

வண்ணாத்திப்பாறை வனப்பகுதி என்பது பெரியாறு புலிகள் காப்பகத்தின் தொடர்ச்சி தான். இந்த தொடர்ச்சி சபரிமலையை தாண்டியும் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த மலையின் ஒரு பகுதியில் கேரளாவின் குமுளி நகரமும், மறுபகுதியில் தேனி மாவட்டத்தின் கூடலுார் நகராட்சியும் அமைந்துள்ளது. தவிர வண்ணாத்திப்பாறை வனப்பகுதியின் அடியில், தேனி மாவட்ட கிராமங்கள் அதிகளவில் உள்ளது. தொடர்ச்சியாக சுருளிமலை, மேகமலை, வருஷநாடு மலை என பெரும் தொடர்ச்சி உள்ளது.

கிட்டத்தட்ட வண்ணாத்திப்பாறையில் இருந்து வருஷநாடு வரை ஒண்ணரை லட்சம் ஏக்கர் வனநிலங்கள் தொடர்ச்சியாக உள்ளன. இதே அளவு பெரியாறு புலிகள் காப்பகத்திலும் உள்ளது. தவிர ஸ்ரீவில்லிபுத்துார் சாம்பல் நிற அணில்கள் சரணாலயமும், செங்கோட்டை வனப்பகுதியின் தொடர்ச்சியும் உள்ளது. ஆக இதன் ஒட்டுமொத்த பரப்பளவை சேர்த்தால் கிட்டத்தட்ட 5 லட்சம் ஏக்கருக்கும் அதிக வனப்பகுதி இருக்கும். இங்கு பலநுாறு யானைகள் உள்ளன. இதற்குள் தான் அரிசிக்கொம்பன் யானையும் விடப்பட்டுள்ளது. ஆக இந்த வனத்திற்குள் அரிசிக் கொம்பனை விட்டது மிகவும் சரியான முடிவாகவே இருக்கும்.

இருப்பினும் மாநில எல்லைகள் மனிதர்களுக்கு தானே. விலங்குகளுக்கு இல்லையே. எனவே மேகமலைப்பகுதி வனவிலங்குகள் சபரிமலை வரையும், சபரிமலை வனவிலங்குகள் மேகமலை வரையும் உலாவுவது சகஜமான விஷயமே.

இதனை கூட பொறுக்க முடியாத மலையாள பத்திரிக்கை உலகமும், மீடியா உலகமும் கேரள வனத்துறையை திட்டி தீர்த்து வருகின்றன. நம் யானையை அவர்கள் தமிழகத்திற்குள் அனுப்பி விட்டனர் என கூக்குரலிடுகின்றனர். தேனி மாவட்ட மக்களுக்கு அரிசிக் கொம்பன் தங்கள் எல்லைக்குள் வருவது பற்றி எந்த கவலையும், வருத்தமும் இல்லை. ஆனால் தேனி மாவட்டம் வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் புகும் பிரச்னையில் நிறைய சிக்கல்களை அனுபவித்து வருகின்றன.

குறிப்பாக தேவாரம் மக்னா யானை விஷயம் தேனி மாவட்ட மக்களின் வயிற்றில் இன்னும் புளியை கரைத்துக் கொண்டுள்ளது. சுருளிமலை, மேகமலை, வருஷநாடு கிராமங்களில் யானை, புலி, கரடிகளிடம் சிக்கி தப்பியவர்களும் உண்டு. உயிரிழந்தவர்களும் உண்டு. இதனால் தான் மக்கள் அரிசிக் கொம்பன் யானையை கண்டு அஞ்சுகின்றனர்.

இந்நிலையில் கேரள வனத்துறை அரிசிக் கொம்பன் யானைக்கு ரேடியோ காலர் மாட்டி அதன் சிக்னல்கள் மூலம் நடமாட்டத்தை கவனித்துக் கொண்டு தான் உள்ளது. குடியிருப்புகளுக்குள் நெருங்கினாலே தனது வனத்துறை படையை அனுப்பி அதன் நடமாட்டத்தை திசை திருப்ப 24 மணி நேர தயார் நிலையில் உள்ளது.

இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் தமிழக மக்களை விட கேரள மக்கள் அதிகம் அஞ்சுகின்றனர். காரணம், தமிழர்கள் வனத்திற்குள் சிறு, சிறு திருட்டுகள் மட்டுமே செய்து பழக்கப்பட்டவர்கள். ஆனால் கேரள மாபியாக்களில் திருட்டுக்களை வர்ணித்தால் உடல் வெடவெடத்து விடும். அவ்வளவு வனக்குற்றங்களை செய்து வருகின்றனர். இதனை கேரள அரசு மூடி மறைத்து அவர்களுக்கு மறைமுக ஆதரவு கொடுத்து வருகிறது.

இப்போது அரிசிக்கொம்பன் இந்த வன மாபியாக்களுக்கு பெரும் தடையாக உள்ளது தான் சிக்கலே. இதனால் தான் மீடியாக்களை துாண்டி விட்டு கேரள வனத்துறை ஏதோ செய்யக்கூடாத குற்றத்தை செய்ததை போல் விமர்சித்து வருகின்றனர்.

இப்போது விஷயத்திற்கு வருவோம். வண்ணாத்திப்பாறையில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானை சுமார் 20 கி.மீ., துாரத்திற்கு மேல் பயணித்து தற்போது தேக்கடி புலிகள் காப்பகத்தில் உள்ள மாவடி, முல்லைக்கொடி வனப்பகுதிக்கு சென்று விட்டது. சுருக்கமாக சொன்னால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாத மிக அடர்ந்த வனப்பகுதியின் மையத்தில் அரிசிக்கொம்பன் சுதந்திரமாக உலா வருகிறான். கேரள மக்களே நிம்மதியாக துாங்குங்கள். தமிழக மக்களைப்பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம். தமிழக மக்களை தமிழக வனத்துறை பாதுகாத்துக் கொள்ளும்.

Tags:    

Similar News