அரியர் மாணவர்கள் தேர்வுக்கு ரெடியா..?

அரியர் தேர்வுகளை 8 வாரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.;

Update: 2021-04-15 06:50 GMT

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி தேர்வுகள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டு அரியர் மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்து இருந்தது.

இந்த முடிவை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி என்று அறிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதிலும் அரியர் தேர்வுக்கு பணம் கட்டி இருந்தால் மட்டுமே தேர்ச்சி என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மே மாதம் முதல் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்த வாய்ப்புள்ளதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட மாட்டாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரியர் தேர்வுகளை 8 வாரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News