தமிழகத்தில் மூன்று புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி
நாடு முழுவதும் புதிதாக 50 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
இந்தியா முழுவதும் மருத்துவக் கல்வியில் பல்வேறு புதிய மாற்றங்கள், வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கையும், அதில் சேரும் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையும் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நடப்புக் கல்வியாண்டில் மருத்துவ படிப்புக்கு மொத்தம் 1,07,658 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 20 அரசு கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் புதிதாக 50 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 8,195 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மத்திய அரசு மேலும் 50 மருத்துவக்கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் மூன்று தனியார் கல்லூரிகளில் தலா 150 என்ற எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக, 450 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன.
சென்னை, பெரம்பலூா், ஈரோடு (வாய்க்கால்மேடு) ஆகிய இடங்களில் இந்த கல்வியாண்டிலேயே (2023-2024) மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் சென்னை (பிஎஸ்ஜி அறக்கட்டளை), பெரம்பலூா் (தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன அறக்கட்டளை), ஈரோடு வாய்க்கால்மேடு (நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அறக்கட்டளை) ஆகியவற்றுக்கு தலா 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க ஒப்புதல் கிடைத்துள்ளது.
இந்த ஆண்டே இங்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளது என மருத்துவக் கல்லுாரி இயக்குனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானாவுக்கு மட்டும் 12 கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது