ஓரம்கட்டப்படுகிறாரா அண்ணாமலை? மீண்டும் வருகிறார் எல்.முருகன்
BJP Annamalai - தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மீண்டும் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.;
BJP Annamalai -கடந்த 2020 ஆம் ஆண்டு முரளிதர் ராவ், சி.டி.ரவி, எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு 24,816 வாக்கு வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார்.
இதன் பின்னர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 2021 ஜூலை மாதம் தமிழ்நாடு பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டார் அண்ணாமலை. தொடர்ந்து அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தும், மத்திய அரசின் செயல்பாடுகளை பிரபலப்படுத்தியும் பேசி வருகிறார் அண்ணாமலை.
தமிழ்நாடு பாஜகவில் பல ஆண்டுகளாக அங்கம் வகிக்கும் பல மூத்த தலைவர்களை வைத்துக்கொண்டு அண்ணாமலையை தலைவராக்கியது மாநில நிர்வாகத்திற்கு உள்ளேயே புகைச்சலை ஏற்படுத்தியது. ஆனால், சர்ச்சைக்குறிய பேச்சுக்களின் மூலமாகவும், தமிழக அரசு மீது வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் மூலமும் மக்களின் பரிட்சையமான முகமாகவே மாறிவிட்டார் அண்ணாமலை.
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனுக்கு கமலாலயத்தில் மீண்டும் தனி அலுவலகமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. எல்.முருகன் அறை திறப்பு பூஜையில் அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவின் முக்கிய முடிவுகளை இனி எல்.முருகனே எடுப்பார் என்று செய்திகள் அடிபட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று பிடிஆர் குறித்து காட்டமாக பதிவிட்ட அண்ணாமலைக்கு பதிலளித்த திமுக எம்பி செந்தில்குமார், "அண்ணாமலை விரக்தியால் இப்படி கூறியுள்ளார். அண்ணாமலையின் செயல்பாடு கட்சித் தலைமைக்கு திருப்தியை தரவில்லை. எனவே அவரை கண்காணிக்க மத்திய இணை அமைச்சரை நியமித்து அதிகாரங்களை குறைத்துள்ளனர். தன் மீது தலைமை கொண்டுள்ள அதிருப்தியை குறைக்கும் வேலையை செய்கிறார். கட்சியின் மூத்த தலைவர்கள் பெரிய குழியை அண்ணாமலைக்கு தோண்டி வருகின்றனர்." என்று தெரிவித்தார்.
இந்த தகவல்கள் உண்மைதானோ என்ற யோசிக்கும் வகையிலேயே அடுத்தடுத்து எல்.முருகனின் கருத்துக்களும் உள்ளன. மத்திய இணையமைச்சரான பிறகு தமிழ்நாடு அரசியல் விவகாரங்கள் தொடர்பாக அதிகளவில் கருத்துக்களை தெரிவிக்காமல் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் மட்டுமே கருத்துக்களை தெரிவித்து வந்தார். அண்ணாமலையே திமுக அரசை கடுமையாக விமரிசித்து வந்தார்.
இந்நிலையில் அண்ணாமலை பிடிஆர் பஞ்சாயத்தில் பிசியாக இருக்க எல்.முருகன் 2 நாட்களாக தமிழ்நாடு அரசை விமர்சித்து வருகிறார். விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காததை விமர்சித்த முருகன் சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் அரசியல் செய்யக் கூடாது என்றார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாகவும், கஞ்சா கடத்தல் அதிகம் உள்ளதாகவும் பேசி இருக்கிறார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2