'அக்னிபாத் ஒரு அட்சயபாத்திரம்' - புரிந்து கொள்வார்களா இளைஞர்கள்?
அக்னிபாத் ஒரு அட்சய பாத்திர திட்டம் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என ஓய்வு பெற்ற மனித வள அதிகாரி கூறி உள்ளார்.;
ஓய்வு பெற்ற மனிதவள அதிகாரி, பல மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளில் பணிபுரிந்தவர். இவர் அக்னிபாத் திட்டம் இந்திய இளைஞர்களுக்கு ஒரு 'அட்சயபாத்திரம்' என வர்ணித்துள்ளார். இந்திய இளைஞர்களுக்கு இதனை விட ஒரு சிறந்த திட்டத்தை கொண்டு வந்து விடவே முடியாது எனவும் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
நான் ஒரு மனித வள அதிகாரியாகவும் ஆலோசகராகவும் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்று உள்ளேன். அக்னிபாத் திட்டத்திற்குள் செல்வதற்கு முன் தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்கள் பள்ளி படிப்பு 10வது அல்லது +2 படித்த பின் (வயது அப்போது தான் 15 - 17 ஆகியிருக்கும்) சிலர் இளங்கலை படிக்க கல்லூரி செல்லலாம். சிலர் 1 வருட ITI படிக்க செல்லலாம். சிலர் டிப்ளமோ(பட்டய படிப்பு) படிக்க செல்லலாம். சிலர் பி.இ. எனப்படும் என்ஜினீயரிங் பட்ட படிப்பு செல்வர். அப்போது அவர்களுடைய வயதில் பெற்றோர் சொல் கேட்பதா அல்லது நண்பர் சொல் கேட்பதா என்று மனதும் தடுமாறும்.
இந்த திட்டத்தின் சிறப்பினை கூறுவதற்கு முன் இளங்கலையோ, இன்ஜினியரிங்கோ அல்லது பட்டைய (டிப்ளமோ) படிப்போ படித்த பின் வேலைக்கு செல்ல முற்படும்போது நடப்பதை அறிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் இந்த திட்டத்தின் அருமை தெரிய வரும்.
இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் தயாரிப்பு நிறுவனங்கள், பொறியியல் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், மின் உபகரணங்கள், டயர்கள், கார்கள் தயாரிக்கும் நிறுவனங்கள். சக்கர உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, தோல் தொழிற்சாலை, ஆடை, ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை, கட்டட தொழிற்சாலை, பெயிண்ட் தொழிற்சாலை இதில் எல்லாம் ஆட்களை தேர்ந்தெடுக்கும் முறை, பணியின் காலம், அதற்கான ஊதியம் மற்றும் வசதிகள் இவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். அங்கு பணிபுரியும் மனித வள அலுவலகம், நிர்வாக அலுவலக தன்மைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
தேர்வு முறை - பணியின் காலம் - வசதிகள் – ஊதியம் மேற்கண்ட நிறுவனங்கள் BE/டிப்ளமோ கல்லூரிக்கே சென்று CAMPUS INTERVIEW என்ற பெயரில் கடைசி வருடம் படிக்கும் மாணவர்களை (முந்தைய 1-2 ஆண்டு தேர்வில் அரியர்ஸ் வைக்காமல் அனைத்தும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பங்கு கொள்ள இயலும்) தகுதி தேர்வு, குழு விவாதம்(Group Discussion) மற்றும் நேர்காணல் செய்து தேர்ந்தெடுப்பர் . இப்போது இவர்களின் வயது17-20 இருக்கும்.
இப்படி தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு முதல் வருடம் மாதம் 15000 இரண்டாம் ஆண்டு மாதம் 17000 மூன்றாம் ஆண்டு மாதம் 20000 (சில நிறுவனங்களில் ஊதியம் மாறுபடும் ஆனால் அதிக பட்சம் இவ்வளவுதான்) சம்பளம் கொடுத்து NEEM TRAINEE என்ற பெயரில் பணியில் அமர்த்துவர்.
போக்குவரத்து மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்ற வசதியும் உண்டு என்பர். 17 வயதில் உணவோடு 15000 என்றதும் அனைவரும் மகிழ்ச்சியுடன் சரி என ஒத்துக்கொள்வர். அதன் பிறகு மிகச்சரியாக 3 ஆண்டு கழிந்ததும் அவர்கள் வெளியில் அனுப்பப்படுவர். எக்காரணம் கொண்டும் அவர்களை நிரந்தரம் செய்யமாட்டார்கள். ஆக முதல் வருடம் 1.80 லட்சம் சம்பளம்
2ம் ஆண்டு 2.04 லட்சம் சம்பளம். 3ம் ஆண்டு 2.40 லட்சம் ஆக 3 ஆண்டுகளில் மொத்தம் 6.24 லட்சம் சம்பளம் வழங்குவார்கள். பிறகு வீதியில் அனுப்பி விடுவார்கள்.அவர்கள் தரும் 3 ஆண்டு சான்றிதழ் எதற்கும் உபயோகப்படாது. இந்த 3 ஆண்டுகளில் தொழிலாளிக்கு ஏதாவது நேர்ந்தால் ஒரு நஷ்ட ஈடும் கிடைக்காது.
இப்படி இருக்க அக்னிபாத் பற்றி பார்ப்போம்..:
கல்வி தகுதி 10 / +2 வயது17.5 to 23 + உடல் தகுதி
முதல் ஆண்டு. 30000 அதாவது 3.60 லட்சம் ஆண்டுக்கு (கம்பெனியில் வேலை செய்தால் 3ம் ஆண்டு கூட 2.40 லட்சம் மட்டும்தான்)
2ம் ஆண்டு 4.20 லட்சம்
3ம் ஆண்டு. 4 80 லட்சம்
4ம் ஆண்டு 4.80 லட்சம். (ஆக 17.40 லட்சம்)
மேலும் தகுதிகளை வளர்த்து கொள்ள வாய்ப்பு இந்தி, ஆங்கிலம் சரளமாக எழுத, பேச பயிற்சி, திறன் வளர்ச்சி பயிற்சி மேலும் இந்திய அரசாங்கத்தின் சான்றிதழ் மேலும் இந்த4 ஆண்டுகளில் ஏதாவது நேர்ந்து இறக்க நேரிட்டால் நஷ்ட ஈடாக 1 கோடி (இதே கம்பெனி என்றால் 3-4 லட்சம் அதுவும் உறுதி இல்லை)
4 ஆண்டு முடிந்து வரும்போது 12 லட்சம் ரொக்கம் (இதே கம்பெனியில் என்றால் gratuity கிடைக்க 5 ஆண்டு ஆகும் அதுவும் சொற்ப பணம்)
கூடவே மத்திய/மாநில வேலைவாய்ப்பில் முன்னுரிமை. பொதுத்துறை, பாதுகாப்புத்துறைகளில் வேலை வாய்ப்பில் முன் உரிமை. (தற்போது அக்னிபாத் வீரர்களுக்கு அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் சலுகைகளை பார்த்தால், இந்த வாய்ப்பு இழந்தவர்கள் அத்தனை பேரும் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.)
இது மட்டுமா கிடைக்கும் ? கூடவே சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், தலைமைப்பண்பு, வி்ட்டுக்கொடுக்கும் தன்மை. ஒரு நாடு முன்னேற இளைஞர்கள் துடிப்புடன் இருக்க வேண்டும். இதில் இணைந்தால் இளைஞர்களை மூளை சலவை செய்ய இயலாது. இந்த பயிற்சி முடித்து பணியில் சேரும் இளைஞன் தன்னம்பிக்கையோடு இருப்பான். சுய கட்டுப்பாட்டோடு இருப்பவனை ஏமாற்ற இயலாது. மாதம்15000 என தந்து உழைப்பை உறிஞ்ச இயலாது.
மதுவிற்கும் கஞ்சாவிற்கும் அடிமை ஆக்கினால்தான் இவர்களது வண்டி ஓடும். மொழி பிரச்னை/ மாநில பிரச்சினை செய்ய இயலாது. இவர்கள் இந்திய அரசை எப்போதும் எதிர்க்க (எந்த கட்சி ஆண்டாளும்) மாட்டார்கள். காரணம் 17-22 வளரும் வயதில் 4 ஆண்டில் பல மாநிலங்களில் பணிபுரிய நேரிடும். அந்தந்த மக்களுடன் பழக நேரிடும். எனவே, அவர்களையும் நமது மக்களென நினைக்கத் தோன்றும் பின் எப்படி மொழி/மாநில பிரச்சினை எழும் ? இந்த பிரச்சனைகள் இருந்தால்தானே இவர்கள் அரசியல் செய்ய இயலும்? எனவே, சுயநலத்திற்காக இந்த இளைஞர்களை குழப்பி மூளையை மங்கச் செய்யும் குழப்பவாதிகளை புறக்கணித்தாலே போதும், இளைஞர்கள் முன்னேற முடியும். மத்திய அரசு எந்த அளவு திட்டமிட்டு செயல்படுகிறது என்பதை அக்னிபாத் திட்டம் புடம் போட்டு காட்டுகிறது. எனவே அக்னிபாத் திட்டத்தை வரவேற்க மக்கள் தான் முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.