மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து 16-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2022-09-12 11:36 GMT

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக பல பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, புறவாசல் வழியாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது.

மின் கட்டணத்தையோ, பேருந்து கட்டணத்தையோ, பால் விலையையோ உயர்த்தமாட்டோம் என்ற சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள், வாக்குறுதிகளை காற்றில் எழுதியதாக கருதி, தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி, ஏற்கனவே துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு கடுமையான துயரத்தை ஏற்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தப்படும் என சொல்லி, மின் கட்டணத்தை உயர்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த உயர்வு இம்மாதத்தில் இருந்தே அமலுக்கு வரும் என்ற அதிர்ச்சிகரமான செய்தியையும் சொல்லி இருக்கிறார்கள்.

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள திமுக அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் (16.09.2022) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

வருகிற 16-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள, பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்கள் 22ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார் 

Tags:    

Similar News