ஆதார் கார்டு புதுப்பிப்பு வதந்தி: அதிகாரிகள் விளக்கம்

ஆதார் புதுப்பிக்க வருகிற 14ம் தேதி (சனி) வரை தான் கால அவகாசம் என்று பரவியது தவறான தகவல்.

Update: 2024-09-12 02:20 GMT

ஆதார் கார்டு (கோப்பு படம்)

கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 55 லட்சம் பேர் ஆதார் கார்டினை புதுப்பித்து உள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆதார் கார்டினை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது மிகவும் நல்லது. அப்படி புதுப்பிக்காவிட்டாலும் கார்டு செயல்பாட்டில் தான் இருக்கும். பொதுமக்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இப்போது வருகிற 14ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற தவறான வதந்தியை சிலர் பரப்பி விட்டுள்ளனர்.

அதாவது, புதிய ஆதார் பதிவு செய்வது தவிர மற்ற அனைத்து ஆதார் சேவைக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஆதாரில் புகைப்படம் மாற்றுவது, கைரேகை, கருவிழி பதிவு செய்வது, முகவரி மாற்றம் செய்வது, பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை திருத்தம் செய்வது போன்ற பணிகளுக்கு ஆதார் மையத்தில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் பொதுமக்களே நேரடியாக ஆதார் இணையதளத்தில் முகவரி மாற்றம் செய்தால் அதற்கு வருகிற 14ம் தேதி வரை கட்டணம் கிடையாது. இலவசமாக முகவரி மாற்றம் பதிவு செய்யலாம். 14ம் தேதிக்கு பிறகு இதற்கும் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். இதனை தவறாக புரிந்து கொண்டு, 14ம் தேதிக்குள் ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இதனால் அனைவரும் ஆதார் மற்றும் இ-சேவை மையத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆதார் கார்டை புதுப்பிக்க 14ம் தேதி கடைசி நாள் என்பது முற்றிலும் தவறான செய்தி. எப்போது வேண்டுமானாலும், ஆதார் கார்டினை புதுப்பித்துக் கொள்ளலாம். அதற்கு கால அவகாசம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News