போலீஸ்துறையின் பொக்கிஷம் ஓய்வு பெற்றார்..!
சினிமா கதையை மிஞ்சும் அளவு சவால்களை சந்தித்த போலீஸ்துறையின் பொக்கிஷம் ஓய்வு பெற்றார்.
அவர் பணியில் இருக்கும் போது இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்த முடியாது. பயன்படுத்தவும் கூடாது. போலீஸ்துறையில் எல்லோரும் கடமையை செய்துதான் ஆக வேண்டும். அதற்காகவே அரசு சம்பளம் தருகிறது. இதனையும் தாண்டி சிலர் சாதனை படைத்திருக்கின்னறர். அவர்களில்ஒருவர் பாண்டிச்செல்வம்.
நெல்லை மாவட்டத்திற்கு சொந்தக்காரர். போலீசாகத்தான் பணியில் சேர்ந்தார். 10 ஆண்டுகள் போலீசில் பணிபுரிந்த பின்னர், நேரடி எஸ்.ஐ., தேர்வு எழுதினார். வெற்றி பெற்று சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அடுத்து இன்ஸ்பெக்டராகவும், டி.எஸ்.பி.,யாகவும் பதவி உயர்வு பெற்று, திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி.,யாக இருந்து வந்த நிலையில் ஓய்வு பெற்றார்.
எல்லோருக்கும் நடப்பது தானே. இதிலென்ன சாதனை என கேட்காதீர்கள்? பாண்டிச்செல்வம் நெருப்பாற்றில் நீந்தி வந்தவர். போலீஸ்துறையில் சி.ஆர்.பி.சி., ஐ.பி.சி., சட்ட அறிவுகளில் பெரும் புலமை பெற்றவர். புலமை பெற்றவர் என்று தான் கூற வேண்டும். அதேபோல் எந்த வழக்கிற்கு என்ன செக்சன், எந்த செக்சனுக்கு எந்த மாதிரி சார்ஜீட் என போலீஸ்துறையின் கைடு போன்றே செயல்பட்டார்.
பணியில் நேர்மை, சுறுசுறுப்பு காட்டி வந்த இவரை அத்தனை ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கும் பிடிக்கும். பொதுவாகவே ஐ.பி.எஸ்., அதிகாரியின் அன்பினை பெறுவது சாதாரண விஷயம் இல்லை என்பது போலீஸ்துறை நண்பர்களுக்கு தெளிவாகத் தெரியும். இவர் எந்த அளவு தொழில் ஞானம், நேர்மை இருந்திருந்தால், இவர் மீது ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அன்பை பொழிந்திருப்பார்கள்..! அதுமட்டுமல்ல...
இவர் தேனி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போது, பெரும் விபத்தில் சிக்கினார். கழுத்து எலும்பு முறிந்து விட்டது. கால்கள் உடைந்து விட்டன. கை விரல்களின் நரம்புகளே நைந்துபோகும் அளவு கைகள் நசுங்கி விட்டன. கிட்டத்தட்ட கூடையில் அள்ளும் அளவு நொறுங்கிக் கிடந்தார் பாண்டிச்செல்வம். அவ்வளவு தான் இனிமேல் பாண்டிச் செல்வம் ஒரு நடைபிணம் தான். அவரை பிழைக்க வைப்பதில் பலனில்லை என டாக்டர்களே கை விரித்த நிலையில், களம் இறங்கினார் தேனி எஸ்.பி., பாலகிருஷ்ணன். தற்போது இவர் கோவை சிட்டி கமிஷனராக இருந்து வருகிறார்.
நேரடியாக பாண்டிச்செல்வம் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கே சென்று, ‘அந்தமருத்துவமனை தலைமை நிர்வாகியிடம் பேசி, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. அவரால் தர முடியாவிட்டால் நான் தருகிறேன். எப்படியாவது காப்பாற்றுங்கள். இவரை போன்று ஒரு தெளிவான, திறமையான அதிகாரி போலீஸ்துறைக்கு கிடைக்க இன்னும் பல ஆண்டுகள் தமிழ்நாடு காவல்துறை காத்திருக்க வேண்டும். அந்த அளவு போலீஸ்துறையில் சிறப்பு ஞானம் பெற்றவர். மனித நேயம் மிக்கவர். துல்லியமாக செயல்படுபவர். ஏழைகளுக்கு நியாயம் கிடைக்க போராடிய சிறப்பு அதிகாரி. எனவே இவரை காப்பாற்றுங்கள்’ என வேண்டுகோள் விடுத்தார்.
பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்., என்பவர் ஒரு அதீத திறன் மிகுந்த அதிகாரி. அவரைப் பார்த்து தமிழகமே வியந்து கொண்டிருந்த வேளையில், அவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை காப்பாற்ற தனது சொந்த பணத்தை செலவிடுகிறேன் என முன்வந்துள்ளார் என்றால், காயம்பட்டு நொறுங்கிக் கிடக்கும் பாண்டிச்செல்வம் சாதாரண அதிகாரி இல்லை என்பது மருத்துவமனை நிர்வாகத்திற்கு புரிந்தது. அடுத்த நொடியே சிறப்பு டாக்டர்கள் குழு சிகிச்சையில் இறங்கியது.
மிகுந்த போராட்டம் காரணமாக மருத்துவ அற்புதம் நிகழ்ந்தது. இனி பிழைக்கமாட்டார் என நினைத்த பாண்டிச்செல்வம் கண்விழித்தார். சரி கண்விழித்து விட்டார். இனிமேல் நடக்க வைக்க முடியுமா? கழுத்து எலும்பு உட்பட அத்தனை எலும்புகளும் நொறுங்கி விட்டதே என புலம்பிய டாக்டர்களுக்கு பாண்டிச்செல்வத்தின் மனோபலம் உதவியது.
பாண்டிச்செல்வம் மெல்ல, மெல்ல போராடி தன்னை தானே விபத்தின் பிடியில் இருந்து மீட்டுக் கொண்டிருந்தார். டாக்டர்களும் உதவி செய்ய, இரண்டு ஆண்டு படுக்கைக்கு பின்னர், மெல்ல எட்டு வைத்தார். அதன் பின்னரும் தொடர் பயிற்சி எடுத்து, மீண்டும் தகுதி பெற்று பணிக்கு திரும்பினார்.
அப்போதும் அவரது பணித்திறன் குறையவில்லை. இதனால் போலீஸ் நிர்வாகம் பாண்டிச்செல்வத்தை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. இன்பெக்டராக சில ஆண்டு பணியில் தொடர்ந்த இவர், டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றார். தேனி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாக இருந்து அடுத்து திண்டுக்கல் மாவட்ட கூடுதல் எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில் வயது அறுபதை தொட்டதும், அரசு இவருக்கு ஓய்வு வழங்கி உள்ளது. திண்டுக்கல்லில் நடந்த இவரது பிரிவு உபசார விழாவில் பங்கேற்று பேசிய அதிகாரிகள், பாண்டிச்செல்வம் வாழ்வில் நடந்த மனம் நெகிழும் கதைகளை சொல்லியது அத்தனை பேரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது. தன்னம்பிக்கை என்றால்... அது பாண்டிச்செல்வம் தான்.... இனிமேல் அவர் விருப்படி ஓய்வு காலத்தை கழிக்கட்டும்.