தமிழ்நாட்டுக்கு வட இந்திய இளம்பெண் கொடுத்த சான்று..! என்னன்னு பாருங்க..!

தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்று ஒரு வட இந்திய இளம் பெண் சான்று வழங்கியுள்ளார்.

Update: 2022-02-01 06:21 GMT

ஸ்வேதா சுமன் (படம் -Quora)

நான் வட இந்தியப் பெண். என் பெயர் ஸ்வேதா சுமன். நான் ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணியில் இருக்கிறேன். கடந்த ஆண்டு தமிழகத்திற்கு சுற்றுலா சென்றிருந்தேன். மதுரை, திருச்சிராப்பள்ளி, மகாபலிபுரம், ராமேஸ்வரம், தஞ்சாவூர், கன்னியாகுமரி, சென்னை என பல இடங்களுக்குச் சென்றிருந்தேன். ஒவ்வொரு வட இந்திய கோவில்கள்,ஆன்மீக ஸ்தலங்களைப் போலவே இந்த இடங்களும் அதனதன் தனித்தன்மையுடன் அமைதியானவைகளாக இருந்தன.

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் எனக்கு மிகவும் பிடித்ததாக நான் கருதும் எனது பயணத்தின் ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிட பாறையில் இருந்து சூரிய உதயத்தை பார்க்கச் சென்றேன். அங்கிருந்து பார்த்தால் சூரிய உதயம் அவ்வளவு அழகு.

பாறையின் தனிமையான ஒரு இடத்தில் அமர்ந்து கடலில் உருவாகும் அலைகளை நான் உற்சாகமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த காட்சி என் மனதை மயக்கியது. எனது உற்சாகத்திற்கு நடுவே, உயரமான, வாட்டசாட்டமான உடல் கட்டுடன் 3 தமிழ் பேசும் ஆண்கள் என்னருகே வந்தனர். மனதுக்குள் எனக்கு படபடப்பாக இருந்தது. நான் இருந்த இடமும் தனியான இடம்.

அவர்கள் என் அருகே வந்து ' உங்களோடு ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா?' என்று கேட்டனர். நான் பயந்துவிட்டேன். ஒருவேளை நான் மறுத்தால், அவர்களின் ஈகோ புண்படுத்தப்படலாம். அவர்கள் என்னிடம் கடுமையாக கூட நடந்து கொள்ளலாம் என்றெல்லாம் என் மூளை நினைக்க ஆரம்பித்தது. ஆனால்,எனக்குள் ஏற்பட்ட உள்ளுணர்வால் நான் செல்ஃபி எடுத்துக்கொள்ள மறுத்தேன். என் பதிலைக் கேட்டு சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரும் வாட்டசாட்டமாக முரடர்கள் போல இருந்தனர்.

அங்கு நான் தனியாகத்தான் இருந்தேன். அவர்கள் என்னை மிரட்டியிருக்கலாம். ஆனால், அவர்கள் செய்யவில்லை. செல்ஃபி எடுக்க அவர்கள் எனது சம்மதத்திற்காகக் காத்திருந்தனர். நான் செல்ஃபி எடுக்க நிராகரித்தபோதும், என் மறுப்பை மதித்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். அதனால் நான் தமிழ்நாட்டை பாதுகாப்பான இடமாக உணர்கிறேன்.

நான் ஒரு வட இந்தியப் பெண்ணாக இருப்பதால், தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் என்பதை உணர்த்த இன்னொரு சம்பவத்தையும் கூற விரும்புகிறேன்.

சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு  நான் கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். ​​அந்த ரயில் பெட்டியில் நானும் அம்மாவும் மட்டுமே பெண்கள். மற்ற அனைவரும் ஆண்கள். ஆனால், ஒருவர் கூட எங்களை வினோதமாக அல்லது வித்தியாசமாக பார்க்கவில்லை. அவர்கள் அவர்களின் சொந்த வேலைகளைச் செய்வதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்தனர். அதனால் ரயிலிலும் நாங்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. உண்மையிலேயே நான்  தமிழ்நாட்டை நினைத்து பெருமை கொள்கிறேன். வட இந்திய மாநிலங்கள் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்களாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், தமிழகம் பாதுகாப்பு மட்டுமின்றி, பெண்களுக்கு கல்வி அளிப்பதிலும், நகரங்களை தூய்மையாக வைத்திருப்பதிலும் கூட அக்கறை கொண்டுள்ளது சிறப்பானதாகும். 

Tags:    

Similar News