பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 75 ஆம்புலன்ஸ் வாகனங்கள்: முதல்வர் வழங்கல்
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 75 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதல்வர் வழங்கினார்.
ஓசூர் மருத்துவமனையை ரூ.100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் பணிக்கு அடிக்கல் நாட்டி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் சிகிச்சை உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 59 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, 108 அவசரகால ஊர்திகளின் சேவைகளை மேம்படுத்தும் வகையில் 75 புதிய ஊர்திகள் மற்றும் 98 நவீன செயற்கை சுவாச கருவிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஓசூர் மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். மேலும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் சிகிச்சை உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 59 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் "மக்களைத் தேடி மருத்துவம்" சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் "இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48", சுகாதார நடைபாதை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
ஓசூர் மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் கட்டுமானப் பணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுதல்
மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறையின் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் இல்லாத மாவட்டங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கிட மாவட்ட புதிய தலைமை மருத்துவமனை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் ஜெயங்கொண்டான், தாம்பரம், பழனி, திருக்கோவிலூர், கரூர், ஓசூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், ராசிபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, கூடலூர், திருத்தணி, வள்ளியூர், திருப்பத்தூர், காங்கேயம், குடியாத்தம், திண்டிவனம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 19 அரசு மருத்துவமனைகள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிக்கு முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
புதிய தொழிற்சாலைகள் மற்றும் விரிவடைந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறை காரணமாக ஓசூர் மாநகராட்சி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஆகையால் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப ஒரு வலுவான சுகாதார உட்கட்டமைப்பை ஏற்படுத்துவது அவசியமான ஒன்றாகும். எனவே, ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, விரிவான சிறப்பு மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில், 22,395 சதுர மீட்டர் பரப்பளவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் 419 படுக்கைகள் கொண்ட மாவட்ட தலைமை மருத்துவமனை 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.
இம்மருத்துவமனையில், அதிநவீன வசதிகளுடன் கூடிய புறநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் உயர் சார்பு பிரிவுகள், அறுவை சிகிச்சை அரங்கு வளாகங்கள், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் நோயாளிகளுக்கான பிரத்யேக அறைகள், ஆண் மற்றும் பெண் உள்நோயாளி பிரிவுகள், வலி மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை பிரிவுகள், முதியோர்களுக்கான சிறப்பு பிரிவுகள், கட்டண பிரிவுகள் ஆகிய பிரிவுகளும், அவசரகால மற்றும் விபத்து மேலாண்மை சிகிச்சை பிரிவு (TAEI), இரத்த சுத்திகரிப்பு சேவைகள், ART மையம், மத்திய மருந்துக் கடைகள், காசநோய் சிகிச்சைக்கான சேவைகள், மருத்துவக் கழிவு
மேலாண்மை மற்றும் நோயாளிகள் பதிவு அறைகள் போன்ற கூடுதல் வசதிகளும் வழங்கப்படும்.
"108" அவசரகால ஊர்திகளின் சேவைகளை மேம்படுத்தும் வகையில் 75 புதிய ஊர்திகள் மற்றும் 98 நவீன செயற்கை சுவாச கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்குதல்
'108' அவசரகால ஊர்தி சேவையானது 2008-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 408' அவசர கால சேவையானது அரசு தனியார் பங்களிப்பு திட்டமாக செயல்படுத்தப்பட்டு, 24x7 மணி நேரமும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அவசர கால மருத்துவ தேவைக்கு தொலைபேசி எண்ணான "108"-ஐ தொடர்பு கொண்டு பயன்பெறுகின்றனர்.
அவசரகால நெருக்கடியின் போது தேவையான மருத்துவ உதவியை இலகுவாகவும், உடனடியாகவும் பொதுமக்கள் அனைவரும் பெற்று பயன்பெறும் வகையில், தற்போது 1,353 எண்ணிக்கையிலான 108' அவசர கால ஊர்திகள் செயல்பாட்டில் உள்ளன. 108' சேவை மூலம் இதுவரை 1.61 கோடி பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
2023-24ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், 108 அவசரகால ஊர்திகளின் சேவையை வலுப்படுத்த 62 புதிய அவசரகால ஊர்திகள், 13 தாய் சேய் நல ஊர்திகள் மற்றும் 98 நவீன வென்டிலேட்டர் கருவிகள் ஆகியவை கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, "108" அவசரகால ஊர்திகளின் சேவைகளை மேம்படுத்த, அடிப்படை வசதி கொண்ட 55 புதிய அவசர கால ஊர்திகள், பழங்குடியினர்கள் பயன்பாட்டிற்காக மலைபகுதிகளில் செல்லத்தக்க வகையில் 7 புதிய நான்கு சக்கர அவசர கால ஊர்திகள், தாய் சேய் நல ஊர்தி (JSSK) திட்டத்தின் கீழ் 13 புதிய ஊர்திகள், என மொத்தம் 14 கோடியே 73 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 75 புதிய ஊர்திகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் விதமாக முதல்வர் ஊர்தி ஓட்டுநர்களிடம் அவ்வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார்.
மேலும், மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்திகளில் ஊர்திகளில் பொருத்திடும் வகையில் 6 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 98 நவீன செயற்கை சுவாச கருவிகளை (Transport Ventilator) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினார்.
இயற்கை பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய அவசரகால ஊர்தி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்குதல்
மிக்ஜாம் புயல் மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையின் போது சிறப்பாக பணியாற்றிய "108" அவசரகால ஊர்தி பணியாளர்கள் எஸ். மோகன், எஸ்.ராஜா, என். அரவிந்த்குமார், கே. சந்தனமாரியப்பன் ஆகியோருக்கு முதல்வர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையில் சிகிச்சை உ தவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 59 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல்
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் இயங்கும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிலையங்களில் காலியாக உள்ள 59 சிகிச்சை உதவியாளர் பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.