ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் அரசுபேருந்துகள் இயக்கம்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை , திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 1069 அரசு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது;
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 1069 பேருந்துகளை இன்று முதல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது . தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தளர்வில் மாநில எல்லைக்குள் ஒரு சில மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பயணிகள் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
அதன்படி அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலத்தில் 227 டவுன் பஸ்களை முழுமையாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது . புறநகர் பஸ்களை பொறுத்தவரை 394 பஸ்களில் 202 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூரில் 3 பணிமனைகள் உள்ளது . இந்த பணிமனைகளில் இருந்து சுமார் 810 பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 25 டவுன் பஸ்கள் மற்றும் புறநகர் பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது .
திருவண்ணாமலை மண்டலத்தில் உள்ள 10 பணிமனைகளில் இருந்து 640 பஸ்கள் இயக்கப்படுகிறது . இதற்காக அனைத்து பஸ்களும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது .
ஆற்காடு பணிமனையில் இருந்து 93 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம் . இன்று 50 டவுன் பஸ்களும் இயக்கப்படுகிதது . வெளியூர்களுக்கு 43 பஸ்களில் 20 பஸ்கள் மட்டும் முதலில் இயக்கப்படும் . அதன்பிறகு பயணிகளின் எண்ணிக்கை பொருத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .
தனியார் பஸ்கள் இயக்கம் எப்போது ? தனியார் பஸ்கள் இயக்கப்படுமா ? என்பது குறித்து தனியார் பஸ் உரிமையாளர்களிடம் கேட்டபோது, 28 ம்தேதி முதல் இயக்கினாலும், இந்த மாதம் 3 நாட்கள் பஸ்கள் ஓடும் நிலையில் ஒரு மாதத்துக்கான சாலை வரி , டோல் கட்டணம் செலுத்த வேண்டும் . அதனால் ஜுலை 1 ம்தேதி முதல் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்