பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,ஸ்டாலின்

Update: 2021-01-06 06:44 GMT

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்குக் காரணமான அதிமுகவினர் உள்ளிட்ட ஒரு குற்றவாளியும் தப்பித்து விடாமல் உடனே தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தமிழக பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதை படமாக பிடித்து மிரட்டி வந்த சம்பவம் பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அரங்கேறியது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹேரன் பால், மைக் பாபு ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக 2 பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தைச் சீரழித்துள்ளது அ.தி.மு.க. அரசு. அதன் உச்சக்கட்ட வெளிப்பாடுதான், பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்குத் தொடர்ச்சியாக நடந்த பாலியல் கொடூரங்கள்.முழுக்க முழுக்க அ.தி.மு.க மேலிடத்தின் ஆதரவுடன், அ.தி.மு.கவில் தொடர்புடையவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்தப் பாலியல் கொடூரத்தை மூடி மறைக்கவும், எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டித் திசை திருப்பவும், செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்-நிருபர்களையே குற்றவாளிகள் போல விசாரணைக்கு உட்படுத்தி அ.தி.மு.க அரசும் அதன் ஏவல் துறையான காவல்துறையும் செயல்பட்டதை தி.மு.க தொடர்ந்து எதிர்த்து, வலுவான குரல் கொடுத்தும், போராடியும் வந்தது.

சிக்க வேண்டிய ஆளுங்கட்சி பிரமுகர்கள் இன்னும் பலர் உள்ள நிலையில், தற்போது பிடிபட்டவர்களுக்கு, பார் நாகராஜன் போல உடனடி ஜாமீன் கிடைப்பதற்கு வழி வகுத்துவிடக்கூடாது என வலியுறுத்துகிறேன். இந்த சம்பவத்தில் ஆளுங்கட்சியோடு பல வகையிலும் நெருக்கமானவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.சி.பி.ஐ. விரைந்து விசாரணை நடத்தி, கொடூர பாலியல் குற்றத்தில், அ.தி.மு.கவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, விரைந்து விசாரணை நடத்தி, ஒரு குற்றவாளி கூட தப்பிக்காதபடி தண்டிக்கப்பட்டு, தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News