மதுரை: வைகை ஆற்றில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளிய கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழாவில், பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளினார்.;

Update: 2022-04-16 03:00 GMT

வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி அருள் பாலித்த கள்ளழகர். 

புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சித்திரை திருவிழா, கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறவில்லை. இம்முறை கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு, விழா ஏற்பாடுகள் நடந்தன.

அதன்படி, கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான விழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மதுரை நகரமே விழாக்கோலத்தில் உள்ளது. சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்,  நேற்று முன் தினம் காலை கோலாகலமாக நடைபெற்றது. சித்திரைத்  திருவிழாவின் 11-வது நாளான நேற்று, மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

இன்று, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது. அவ்வகையில், பச்சை பட்டு உடுத்தி இறங்கினார். இதை ,பல லட்சம் கண்டு தரிசித்தனர். மழை காரணமாக வைகை ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால்,  பக்தர்கள் யாரையும் வைகை ஆற்றில் இறங்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இருந்தாலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், ஆற்றில் இறங்குவதை தடுக்க முடியவில்லை.

நிகழ்ச்சியில், அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர்,   மாநகர காவல் ஆணையர்  செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வைகை ஆற்றில் அழகர் இறங்கும் போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசம் கோஷமிட்டனர். ஏராளமான பக்தர்கள் வைகை நதிக்கரையில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags:    

Similar News