பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்!
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.;
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை கட்சிகள் செய்து வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் பாஜக உத்தேச வேட்பாளர்களை இறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டம், பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில், தமிழகத்தில் இருந்து கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இன்று டெல்லி செல்லவுள்ளனர். அவர்கள் பா.ஜ.க தேசியத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து, தமிழகத்தில் உள்ள அரசியல் சூழலை எடுத்துரைக்க உள்ளனர். 39 தொகுதிகளிலும் யார் போட்டியிட்டால் நன்றாக இருக்கும், தொண்டர்களின் விருப்பம் என்ன என்ற பட்டியலை அவர்கள் எடுத்து செல்கிறார்கள் என தெரிவித்தார்
பட்டியல் குறித்து தலைமையிடம் ஆலோசிக்கவுள்ளதாக கூறிய அவர், தொண்டர்கள் சொல்வதை மேலே சென்று தலைமையிடம் சொல்வதுதான் எங்கள் வேலை. இறுதி முடிவுகளை மத்திய தேர்தல் பொறுப்பாளர்கள்தான் எடுப்பார்கள். இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்
மேலும், தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் இந்த குழு தமிழகம் திரும்பும் முன்னரே, தமிழக பா.ஜ.க வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகலாம் என அவர் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், விஜயதாரணி, பாஜக மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, ராமலிங்கம், கட்சியின் பொதுச் செயலாளர்கள் ஸ்ரீனிவாசன், நரேந்திரன், கார்த்தியாயினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.