சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்புடன் கூடிய விவசாயி சின்னம் கிடைக்குமா?

நாடாளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்புடன் கூடிய விவசாயி சின்னம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2024-02-15 15:26 GMT

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கீடு செய்ததால் சீமான் அப்செட் ஆகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும். இதற்கான அறிவிக்கை இந்த மாத இறுதியில் வெளியானாலும் வெளியாகும் என தெரிகிறது. இந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர முனைப்பு காட்டி வருகிறது.

ஆனால் எதிர்க்கட்சிகளோ பாஜக அல்லாத ஒரு ஆட்சி ஏற்பட வேண்டும் என விரும்புகின்றன. இந்த நிலையில் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதிமுகவில் பல சலசலப்புகளுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலை சந்திக்க போகிறார். அது போல் திமுக ஆட்சிக்கு வந்து முதல் பெரிய தேர்தல் இதுவாகும். ஏற்கெனவே திமுகவுக்கு எதிராக அதிமுகவும், பாஜகவும் பிரசாரம் செய்து வரும் நிலையில் இந்த தேர்தல் திமுகவின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டியதாக இருக்கிறது. பாஜகவை பொருத்தமட்டில் அதிமுக கூட்டணி முறிந்துவிட்டதால் தனித்து நின்றோ அல்லது உதிரி கட்சிகளுடன் நின்றோ தேர்தலை சந்திக்க வேண்டும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்த பதவிக்கு தகுதியில்லை என பாஜகவில் அதிருப்தி தலைவர்கள் குறை கூறி வரும் நிலையில் தனது பதவிக்கான கெத்தை, நாடாளுமன்றத் தேர்தல் மூலம் அண்ணாமலை காட்ட வேண்டிய இடத்தில் இருக்கிறார்.

இப்படி இருக்க வழக்கம் போல் நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் வழக்கமாக போட்டியிடும். அதாவது கரும்பு விவசாயி சின்னம்.

ஆனால் இந்த சின்னம் இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்காது என கூறப்படுகிறது. ஏனென்றால் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஜக்யதா கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துவிட்டதாம். இதனால் சீமான் அதிர்ச்சியில் உள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் சீமான் முறையிட உள்ளார். அங்கு முறையிட்டும் அந்த சின்னம் கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் உள்ளதாக நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் சென்றாலும் உடனடியாக முடிவெடுத்து நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைக்காத நிலை உள்ளது.

நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை தமிழகத்தில் குறிப்பிட்ட சதவீத ஓட்டு வங்கி வைத்து உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு  ஏழு சதவீத வாக்குகளை அள்ளியது. சில தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்தது. சீமான் கட்சி ஆரம்பித்தது முதல் அவருக்கு கரும்புடன் கூடிய விவசாயி சின்னம் தான் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் தற்போது அந்த சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுவது சீமானுக்கு மட்டும் அல்ல அவரது கட்சியினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News