அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? வழக்கு ஒத்தி வைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கு நவம்பர் 28ந்தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.;
அமைச்சர் செந்தில் பாலாஜி.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு வழக்கு விசாரணை வருகிற 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சரவையில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர் பண மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக முறையான விசாரணை நடைபெறவில்லை.
இந்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையிலும் செந்தில்பாலாஜி மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை ஏற்று ஐகோர்ட்டு அவர் மீதான வழக்கை ரத்து செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விரைவாக விசாரித்து அறிக்கையை அனுப்பும்படி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை தீவிர படுத்தப்பட்டது. இந்த நிலையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அமலாக்கத்துறை கைது செய்தும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டதால் அவருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.பின்னர் ஐகோர்ட் உத்தரவுபடி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்.
இதற்கிடையில் செந்தில் பாலாஜி தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த அனைத்து மக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆதலால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.
அப்போது செந்தில் பாலாஜி தொடர்பான மருத்துவ அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்யும்படியும் வழக்கு விசாரணையை வருகின்ற 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.