சிறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நாளை தெரியும்
அமலாக்க துறையால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது நாளை தெரியும்.;
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாமீன் கோரி 2வது முறையாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றம் வரை செந்தில் பாலாஜி தரப்பு சென்ற நிலையில், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து, புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை 17வது முறையாக, ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
230 நாட்களை கடந்து சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் செந்தில் பாலாஜி. இதற்கிடையே, ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தன்னை கைது செய்யும் நோக்கில், ஆவணங்களில் அமலாக்கத்துறையினர் திருத்தம் செய்துள்ளதாகவும், தங்களுக்கு ஆவணங்கள் முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதை விசாரணையில் தான் நிரூபிக்க முடியும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் என்ன தீர்ப்பை அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னதாக திமுக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரின் சொத்து குவிப்பு வழக்குகளையும், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கையும் தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்ததோடு அந்த வழக்கு விசாரணைகளின்போது அதிரடி கருத்துகளையும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.