முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நாளை தீர்ப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பதற்கு நாளை அளிக்கப்படும் தீர்ப்பின் மூலம் தெரிய வரும்.;
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி 2-வது முறையாக தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் வாதிட்டார். அவர் வைத்த வாதத்தில், அமலாக்கத் துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றியதாக கூறிய ஆதாரங்களை, தற்போது மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருந்து பெற்றதாக தெரிவிக்கின்றனர் என வாதிட்டார்.
செந்தில் பாலாஜிக்கு எதிராக 30 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்க துறை தரப்பில் வாதிடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், போராட்டங்கள் நடத்தியதற்காக, அப்போதைய முதல்வருக்கு எதிராக கோஷமிட்டது, கொரோனா விதிகளை மீறியதாக அரசியல் காரணமாக தொடரப்பட்ட வழக்குகள் அவை. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராகவும் இல்லை. எந்த நிபந்தனையை ஏற்க தயாராக இருக்கிறார்” என்று வாதிட்டார். அமலாக்க துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் தனது வாதத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார். ஜாமீன் மனு விசாரணைக்கு வந்ததால் தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதை அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டதில் இருந்து அவர் செல்வாக்கான நபர் என்பது தெளிவாகிறது.
சாட்சிகள் அச்சுறுத்தப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க கூடாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடெஷ் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில், செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படுகிறது. நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதி தீர்ப்பளிக்க உள்ளார்.