ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?பரபரப்பு தகவல்

ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.;

Update: 2022-10-18 12:31 GMT

ஐ.பி.எஸ் .அதிகாரி விஜயகுமார்.

தமிழக பா.ஜ.க.தலைவராக இருப்பவர் அண்ணாமலை. அவர் ஐ.பி.எஸ். அதிகாரி. தமிழ்நாட்டில்  கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் என்ற சிற்றூரை அடுத்த தொட்டம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். ஐ.பி.எஸ். படித்த அவர் கர்நாடகத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றினார்.  அவர் திடீர் என்று பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழகம் வந்தாா். மக்களுக்காக பாடுபடப்போவதாக கூறிவந்தார். பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். சில நாட்களிலேயே தமிழக பா.ஜ.க. தலைவர் ஆனார். 

அதே போல் இப்போதும் ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் திடீர் என்று பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழகம் திரும்பி உள்ளார். இவரை தெரியாதவர்கள் தமிழகத்தில் இருக்க முடியாது. சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார். தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டாக 1975–ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்தார். பின்னர் மத்திய அரசு பணிக்காக அனுப்பப்பட்ட அவர் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியின் சிறப்பு காவல் படை தலைவராக இருந்தார். மீண்டும் தமிழக பணிக்கு திரும்பிய அவர் திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு ஆனார். 1991–ல் ஜெயலலிதா முதல்–அமைச்சர் ஆனதும் அவரது சிறப்பு காவல் படை தலைவராக இருந்தார்.  2001–ம் ஆண்டு விஜயகுமார் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டார்.

 2003–ம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட  கமாண்டோ படையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.  2004–ல் வீரப்பனை இவர் தலைமையிலான கமாண்டோ படையினர்  சுட்டுக்கொன்றனர். பின்னர் விஜயகுமார்  மீண்டும் மத்திய பணிக்கு சென்றார்.  கடந்த 2012–ம் ஆண்டு மத்திய ஆயுதப்படை போலீசில் டைரக்டர் ஜெனரலாக இருந்த போது அவர் ஓய்வுபெற்றார். ஆனால் மத்திய அரசு அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கியது.  நக்சலைட்டுகளுக்கு எதிரான வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். 6 ஆண்டுகாலம் பணிநீட்டிப்புக்கு பின்னர்  கடந்த 2018-ம் ஆண்டு அந்த பணியில் இருந்து ஓய்வுபெற்றார். ஆனால் மத்திய அரசு அவருக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு வழங்கியது. காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகராக இருந்த அவர் கடந்த 2019-ம் ஆண்டில் உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார்.  நக்சல் பாதிப்பு மிக்க மாநிலங்களுக்கு பாதுகாப்பு ஆலோசனை வழங்கி வந்தார்.

இந்த நிலையில் தான் 4நாட்களுக்கு முன்பு  உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் பதவியை விஜயகுமார்  திடீர் என்று ராஜினாமா செய்து இருக்கிறார்.  தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார். தான் சென்னையில் வசிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார்  2012ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றாலும்  மத்திய அரசு அவருக்கு தொடர்ந்து பதவி  நீட்டிப்பு வழங்கியது. ஆலோசகராக  பா.ஜ.க. அரசு அவரை அருகிலேயே வைத்துக் கொண்டது. இந்த சூழ்நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழகம் திரும்பி இருப்பது அரசியல் வட்டாரத்தில்  ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து வர உள்ள பாராளுமன்ற  தேர்தல், தமிழகம் மற்றும்  தென் மாநிலங்களில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று பா.ஜ.க. திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறது. அதற்கு  ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமாரை எந்த வகையிலாவது பா.ஜ.க. பயன்படுத்தி கொள்ளும் என்று அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News