இருப்பதோ இரண்டு இடம், யாருக்கு வாய்ப்பு தருவது?: குழப்பத்தில் இரட்டை தலைமை
இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களாக யாருக்கு வாய்ப்பு அளிப்பது என அதிமுகவில் குழப்பம்;
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட டி கே. எஸ். இளங்கோவன், ஆர். எஸ். பாரதி, ராஜேஷ்குமார், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார், எஸ். ஆர். பாலசுப்பிரமணியன் ஆகிய ஆறு எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
தமிழக சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் பலத்தை பொறுத்து திமுகவுக்கு மூன்று எம்பி பதவிகள், அதிமுகவுக்கு இரண்டு எம்பி பதவிகள் கிடைக்கும். ஆறாவதாக உள்ள எம்பி பதவியை காங்கிரஸ் திமுகவுடன் கேட்டு பெற்றிருக்கிறது.
அதிமுக சார்பில் இரண்டு எம்பி பதவிகள் மட்டுமே இருப்பதால் அந்த 2 இடங்களையும் ஓபிஎஸ், இபிஎஸ் தலா ஒரு இடம் என்று எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இருப்பது இரண்டு இடம்தான் என்றாலும் அதற்கு பொன்னையன், செம்மலை, வழக்கறிஞர் இன்பதுரை , கோகில இந்திரா, ஜே.சி.டி.பிரபாகரன், டாக்டர் அபரூபா சுனந்தனி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகை விந்தியா உள்ளிட்டோர் இந்த போட்டியில் இருப்பதாக தகவல் பரவுகிறது.
டாக்டர் அபரூபா சுனந்தனி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியலுக்கு அழைத்ததன் பேரின், அரசு டாக்டர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். ஆகவே, அவருக்கு வாய்ப்பு தந்தே ஆக வேண்டும் என்று கட்சியின் மருத்துவ அணி நிர்வாகிகள் தரப்பில் வலியுறுத்துகிறது.
ஜெயலலிதா இருந்தபோதே அவரின் முழு நம்பிக்கையை பெற்றவர் விந்தியா. அனல் பறக்கும் பிரச்சாரத்தால் போயஸ் கார்டனில் அவருக்கு செல்வாக்கு அதிகமாகவே இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னரும் கடந்த தேர்தல்களில் தீவிர பிரச்சாரம் செய்து இருக்கிறார் விந்தியா. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கேட்டு கடைசி வரைக்கும் காத்திருந்தவர் விந்தியா. அப்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் மாநிலங்களவை சீட்டு கிடைக்கும் என்ற ஆறுதல் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் இந்த முறை தனக்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது என்று அவர் நம்பிக் கொண்டிருக்கிறார் . தலைமையிடமும் மோதிக் கொண்டிருக்கிறார்.
இருக்கும் இரண்டு இடத்தை யாருக்கு அளிப்பது என இரட்டை தலைமை தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறது