பா.ஜ.க.விற்கு யார் அடிமை? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
பா.ஜ.க.விற்கு யார் அடிமை? என மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
பாரதிய ஜனதாவின் உண்மையான அடிமை யார்? என மு.க. ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. தலைவரும் தமிழக முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்று ஒரு காணொலி பதிவு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் பாரதிய ஜனதா கட்சிக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, அ.தி.மு.க.வையும் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தான் அமலாகத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியின் இடங்களில் சோதனை செய்து அவரை கைது செய்தது. மேலும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன், அவரை மருத்துவமனையிலும் அனுமதித்தனர். ஆனால் நேற்று முதலமைச்சர் வெளியிட்ட காணொலியில், முதலமைச்சர் அவருக்கு ஆதரவாக பதற்றத்தோடு பேசுகிறார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஒரு பொம்மை முதலமைச்சர் உள்ளார். எப்படி பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்து செயல்படுகிறார். அதனால் தான் இவருடைய அமைச்சரவையில் இருக்கும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பொறுக்கமுடியாமல் உதயநிதியிடமும், சபரீசனிடமும் 30,000 கோடி இருப்பதாக ஆடியோவை வெளியிட்டார்.
அதில் அதிகமான பணத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தான் கொடுத்தார் என சமூகவலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதை பற்றிய விவரங்களை அமலாக்கத்துறையிடம் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில் தான் அமைச்சர்களும், முதலமைச்சரும் அவசரமாக செந்தில் பாலாஜியை சென்று சந்தித்தனர்.
எனவே தான் பதறிப்போய் வீடியோ வெளியிட்டுள்ளார். மத்தியில் கூட்டணியில் ஆட்சியில் இருந்தாலும் கூட, சொந்த சகோதரி கனிமொழி கைது செய்யப்பட்ட போது சென்று பார்க்காத ஸ்டாலின், இப்போது செந்தில் பாலாஜியை சென்று பார்க்கவேண்டிய அவசியம் என்ன? மடியில் கனம் இருப்பதால் தான் வழியில் பயம் இருக்கிறது.
காவல்துறை இன்று ஏவல்துறையாக மாறியிருக்கிறது. பார்கள் முறைகேடாக நடைபெற்று வருகிறது. இந்த வருமானம் எல்லாம் முதலமைச்சரின் குடும்பத்திற்கு தான் சென்றுகொண்டிருந்தது. எங்கே செந்தில் பாலாஜி இதை அமலாக்கத்துறையிடம் சொல்லி விடுவாரோ என்று முதலமைச்சரும் அமைச்சர்களும் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளார்கள்.
இந்த இரண்டாண்டு காலங்களில் ஊழலில் தான் வளர்ச்சி இருக்கிறது. வேறு எந்த துறையிலும் வளர்ச்சி இல்லை. சுமார் 30,000 கோடி இவர்கள் சம்பாதித்துள்ளார்கள் என்பதை இப்போது நாட்டு மக்களிடையே வெளிப்படையாக தெரிந்துள்ளது. யாரோ எழுதிக்கொடுப்பதை தான் முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே ஆர்.எஸ்.பாரதி, நான் நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நான் இந்த வழக்கை தொடர்ந்து நடத்துகிறேன். அதுதான் அ.தி.மு.க. முதலமைச்சருக்கு உண்மையில் திராணி இருந்தால் வழக்கை சந்திக்க வேண்டும். நீதிமன்றத்தில் தான் நிரபராதி என நிரூபித்து வெளியில் வர வேண்டும். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினும், செந்தில் பாலாஜியும் நாடகமாடிக்கொண்டிருக்கிறார்கள். மக்களை குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்
அன்றே கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது இன்றைய முதலமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இன்று மட்டும் செந்தில் பாலாஜி எப்படி நல்லவராகிவிட்டார்..? அ.தி.மு.க.வை முதலமைச்சர் சீண்டிப்பார்க்கக்கூடாது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் அவர்களின் ஊழலுக்கு துணைபோக வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் அடிமை என சொல்கிறார். ஆனால் அதே பா.ஜ.க.வுடன் 1999ல் தி.மு.க.கூட்டணி வைத்தது. அமைச்சரவையில் தங்களது குடும்பத்தை அங்கம் பெற வைத்தார்கள். அதிகாரத்திற்கும், தங்கள் குடும்பம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவும் தி.மு.க. என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று நாட்டு மக்கள் அறிவார்கள்.
அ.தி.மு.க. யாருக்கும் அடிமையானவர்கள் இல்லை. சொந்த காலில் நிற்கக்கூடியவர்கள். தமிழக மக்களுக்காக, உரிமைகளுக்காக பாடுபடக்கூடியவர்கள். அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் குறித்து ஸ்டாலின் பேசவில்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கு இதுவே சான்று.அ.தி.மு.க.வை உங்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. ஒரு தொண்டனைக்கூட உங்களால் தொட முடியாது. அ.தி.மு.க.வை தொட நினைத்தவர்கள் அழிந்து போவார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.