நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு எங்கே எப்போது?
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது.
தமிழ் திரை உலகின் உச்ச நடிகரான விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். அந்த கட்சியினை டெல்லிக்கு சென்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவித்தார். முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்கு வசதியாக திரையுலகில் இருந்து விலகுவதாகவும் நடிகர் விஜய் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அரசியல் கட்சி அறிவிப்புக்கு பின்னர் நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தலுக்கு முன்பாக மாநில மாநாடு நடத்த வேண்டும் என நிர்வாகிகள் ஆலோசனை கூறினார்கள். இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாட்டை மதுரை அல்லது சேலத்தில் நடத்தலாம் என முடிவு செய்தனர். அப்போது அதிமுக, திமுக பாணியில் அரசியல் வரலாற்றில் முத்திரை பதிக்கும் விதமாக திருச்சியில் முதல் மாநில மாநாட்டை நடத்தலாம் என மூத்த நிர்வாகிகள் ஆலோசனை வழங்கினர்.
அதன்படி திருச்சியில் சிறுகனூர், பொன்மலை ஜி கார்னர், இனாம்குளத்தூர் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே மற்ற கட்சிகளின் மாநாடு நடந்த இடங்களை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்தார். இறுதியாக திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் மாநாடு நடைபெற்ற சிறுகனூர் இடத்தை தேர்வு செய்தனர். ஆனால் அதற்கு அந்த இடத்தில் மாநாடு நடத்துவதற்கு போலீஸ் அனுமதி உட்பட பல சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால் சேலத்தில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் ஒரு குழுவும் ஈடுபட்டது.
ஆனாலும் தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் நடத்த நான்கு பேர் கொண்ட மாநில நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் இறுதி முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தலாம் என இறுதி செய்தனர்.
இதற்காக கட்சி நிர்வாகிகள் ரயில்வே நிர்வாகத்தை அணுகி செப்டம்பர் 21 அல்லது வேறு தேதியில் நடத்த கட்சி நிர்வாகிகள் முன் அனுமதி பெற்றுள்ளனர். இதிலும் இடையூறு ஏற்படக் கூடாது என்பதில் கட்சி நிர்வாகிகள் கூடுதல் கவனம் செலுத்தி ரகசியமாக ரயில்வே நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுள்ளனர். ஆடி மாதம் முடிந்தவுடன் இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உடனடியாக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிகிறது.
இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை மற்றும் கொடி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். திமுக அதிமுக உள்ளிட்ட இதர கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்புள்ளது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.
தமிழக வெற்றிக்கழகத்தின் திருச்சி மாநில மாநாடு திருச்சியில் இதுவரை நடத்திய அரசியல் கட்சிகளின் மாநாட்டை மிஞ்சும் வகையில் தொண்டர்களை திரட்டவும் கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள்.