ஆளுநர் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்தது என்ன - முதலமைச்சர் விளக்கம்
துப்பாக்கிச் சூட்டை டி.வியை பார்த்து தெரிந்து கொண்ட முன்னாள் முதல்வர் சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது;
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டி.வியை பார்த்து தெரிந்து கொண்டேன் எனக் கூறிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது - ஆளுநர் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்தது என்ன- முதலமைச்சர் விளக்கம்
மயிலாடுதுறையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ` சம்பவ இடத்தில் நடக்காத ஒன்றைக் கற்பனை செய்து பேச வேண்டாம்' எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தில் நடைபெற்ற புஷ்கர விழாவுக்கு செவ்வாய்கிழமையன்று ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.எம், வி.சி.க ஆகிய கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் இறங்கின. காலை சரியாக 9.50 மணியளவில் ஆளுநரின் கான்வாய் சென்றபோது கறுப்புக் கொடியை வீசி சிலர் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து டி.ஜி.பியும் விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதேநேரம், இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ` ஆளுநர் மீது கற்களையும் கம்புகளையும் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கேடு அடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லையெனில் சாதாரண மக்களுக்கு இந்த அரசு எப்படி பாதுகாப்பு அளிக்கும்?' எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், `ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கொடிகளை வீசியதாக கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை என ஏ.டி.ஜி.பி விளக்கம் அளித்துள்ளார். சம்பவ இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகளை அமைத்து தங்களது கட்டுப்பாட்டில் போலீஸார் வைத்திருந்தனர். ஆளுநரின் கான்வாய் கடந்து சென்ற பின்பே கையில் வைத்திருந்த கறுப்புக் கொடிகளை போராட்டக்காரர்கள் வீசியுள்ளனர்' என்றார்.
ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது எந்தவித கொடிகளும் வீசப்படவில்லை எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், ` டிஜிபிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி எழுதிய கடிதத்திலும் எந்தவித கொடிகளும் வீசப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை அரசியலுக்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கம்போல, இணைந்து அறிக்கை வெளியிடும் அ.தி.மு.க தலைவர்கள், தற்போது தனித்தனியே அறிக்கை வெளியிட்டுள்ளனர்' எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசுகையில், ``இந்த விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது நியாயமான கோரிக்கை. ஆளுநரின் பயணத்தின்போது ஐ.ஜி தலைமையில் 2 டி.ஐ.ஜிக்கள், மாவட்ட எஸ்.பிக்கள் ஆறு பேர் உள்பட ஆயிரத்து நானூறுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆளுநரின் பாதுகாப்பு தொடர்பாக அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை'' என்றார்.
தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு திண்டிவனம் அருகே ஆளுநர் சென்னாரெட்டியின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விவரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், `` ஆளுநராக இருந்த சென்னாரெட்டியின் வாகனம் மீது கல், முட்டை ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மறுநாள் அனைத்து நாளிதழ்களிலும், `ஆளுநர் சென்னாரெட்டி உயிர் தப்பினார்' என செய்தி வெளிவந்தது. அ.தி.மு.க ஆட்சியில் ஆளுநராக இருந்த சென்னாரெட்டிக்கு என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். சென்னாரெட்டியை திரும்பப் பெற வேண்டும் எனவும் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தினர்.
விமான நிலையத்திலேயே முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு வந்த பிறகும் கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டி.வியை பார்த்து தெரிந்து கொண்டேன் எனக் கூறிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. எனவே, தற்போது நடக்காத ஒன்றை வைத்து கற்பனை செய்து அரசியல் செய்ய வேண்டாம்' எனவும் குறிப்பிட்டார்.