முப்பெரும் குற்றவியல் சட்டங்களுக்கு வரவேற்பு: லட்டு வழங்கிய பாஜக வழக்கறிஞர்கள்
முப்பெரும் குற்றவியல் சட்டங்களுக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் பாஜக வழக்கறிஞர்கள் லட்டு வழங்கி கொண்டாடினர்.;
மத்திய அரசு 3 புதிய கிரிமினல் சட்டங்களை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டங்களில் உள்ளது என்ன என்பதை பார்ப்போமா?
குற்றவியல் வழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணை முடித்த 45 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். நீதிமன்றங்கள் தேவையின்றி வழக்கை ஒத்தி வைக்கக்கூடாது, சாட்சிகளை பாதுகாக்க அனைத்து மாநில அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும்.
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை பெண் காவல் அதிகாரி மற்றும் பாதிக்கப்பட்டவரின் உறவினர் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும். ஏழு நாட்களுக்குள் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
குழந்தையை வாங்குவதும் விற்பனை செய்வதும் கடும் அபராதம் மற்றும் தண்டனைக்கு உள்ளாக்கப்படும்.சிறார் மீதான கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படக்கூடும்.
கும்பலாக சேர்ந்து கொலை செய்தல், வன்கொடுமை செய்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு வந்தது.மேற்சொன்ன குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான திருட்டு, குடி போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு புதிய சட்டத்தின்படி சமூக சேவை செய்யும் வகையில் உத்தரவிடப்படும்.
ஜீரோ எஃப்ஐஆர் முறையும் இதன் மூலம் அறிமுகமானது. அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு காவல் நிலையத்திலும் தனிநபர்கள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய புதிய சட்டம் அனுமதிக்கிறது.
இன்று மத்திய அரசு அமல் படுத்தியுள்ள முப்பெரும் குற்றவியல் சட்டங்களை ஆதரித்து வரவேற்கும் விதமாக திருச்சி நீதிமன்றம் முன் பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர்கள் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் இந்து முன்னணி வழக்கறிஞர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியை வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் எஸ் மாரியப்பன், மாவட்டத் தலைவர் முத்துமாணிக்கவேலன், துணைத் தலைவர் விஜய் அகிலன், முத்துக்குமார் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் லெனின்பாண்டியன், மூத்த வழக்கறிஞர் தனபால், வனிதா, ஆதித்யன், அகில பாரத வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் கேசவன், மாவட்டத் தலைவர் கணபதி, கோபிநாதன் இந்து முன்னணி வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோரும் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் எஸ் ராஜசேகர் முன்னிலையில் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.