ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்க வந்த வேலூர் இப்ராகீம் திருச்சியில் கைது
ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்க வந்த வேலூர் இப்ராகீம் திருச்சியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்க வந்த வேலூர் இப்ராஹீமை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கு நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் அனுமதி கிடைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனை எதிர்த்து ஆர். எஸ். எஸ் .இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போலீசார் தடை விதித்தது செல்லும் என கூறியது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என கூறியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று திருச்சி, வேலூர், ஈரோடு, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் ஆர். எஸ். எஸ். சார்பில் பேரணி நடைபெற்றது.
திருச்சியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் வேலூர் இப்ராகிம் வந்தார். ஆர்.எஸ்.எஸ். பேரணி திருச்சி உறையூரில் இருந்து இன்று புறப்பட்டது. இந்த நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக வேலூர் இப்ராகிம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த போலீசார் அவரை பேரணியில் பங்கேற்க உங்களுக்கு அனுமதி கிடையாது எனக்கூறி சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து அவர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசார் அவரை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கொண்டு சென்றனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.