விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மறைந்த தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
தமிழ் திரையுலகம் ஏராளமான அரசியல் தலைவர்களை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் விஜயகாந்த் தனிச்சிறப்பு மிக்கவர். திரைப்படங்களில் பேசும் வசனங்களை அவர் மக்கள் மத்தியிலும் பேசியதே இந்த சிறப்புக்கு காரணம். இது மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இப்படித்தான் அவர் தேமுதிக எனும் கட்சியை உருவாக்கினார். கட்சியை தொடங்கிய ஒரே ஆண்டில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திலும் நுழைந்தார் அவர்.
சிறந்த எம்.எல்.ஏ.வாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். இவருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட மோதல் போக்கு, அதை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சரிவு, தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு மாற்றாக 2016ல் மக்கள் நல கூட்டணியில் நின்று தேர்தலில் தோல்வியடைந்தது என அரசியல் வாழ்க்கையிலிருந்து ஒரு கட்டத்தில் அவர் முற்றிலுமாக வெளியேறினார். அரசியல் தோல்வி ஒருபுறம் எனில், உடலும் ஒத்துழைக்காமல் இழுக்கடித்தது.
வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று பார்த்தார். பெரிய அளவில் பலன் இல்லை. அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி அறிக்கை வாயிலாக மட்டுமே அரசியல் செய்து வந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற விஜயகாந்த் அதில் இருந்து மீண்டார். அவ்வப்போது கட்சி அலுவலகம் வந்து தொண்டர்களை சந்தித்து வருகிறார் விஜயகாந்த். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல் நலம் குறித்து சலசலப்பு எழுந்தது. ஆனால் அதையெல்லாம் முறியடித்து மீண்டு வந்தது, கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களுக்கு உற்சாகமளித்தார். இருப்பினும் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான மருத்துவ பரிசோதனை என்று சொல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையிலிருந்து நெகட்டிவ்வான அறிக்கை வெளியானது. அதாவது அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அதிலிருந்து அவரை மீட்க மருத்துவர்கள் போராடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து டிச.28ம் தேதி அதிகாலை அவர் உயிரிழந்துவிட்டதாக அறிக்கை வெளியானது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதேபோல திரை துறையினரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருகை தந்திருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று விஜயகாந்த்தின் இல்லத்திற்கு சென்று, அவரது உருவ படத்திற்கு மலர் தூவி இரு கரங்களையும் கூப்பி மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.
ஏற்கனவே பிரதமர் மோடி திருச்சி விமான நிலைய திறப்பு விழாவில் விஜயகாந்த் மறைவிற்கு அனுதாபம் தெரிவித்து பேசினார். மேலும் தான் ஒரு பெரிய தேச நலன் மிக்க நண்பரை இழந்து விட்டதாகவும் வருத்தத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.