சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி தி.மு.க.வினரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

ஆலோசனை கூட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி தி.மு.க.வினரை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து இருப்பது பேசு பொருளாகி உள்ளது.

Update: 2024-02-05 17:42 GMT
உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள்.

திருச்சி சிவா எம்.பி. வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நபர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருப்பது திருச்சி தி.மு.க.வினர் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா வீட்டில் அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய நிகழ்வும், அதைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் புகுந்தே தாக்குதல் நடத்திய சம்பவமும் அப்போது தமிழ்நாட்டின் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்தன. சட்டசபையில் இந்த விவகாரத்தை வைத்து அதிமுக புயலை கிளப்பியது.

இதையடுத்து அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், துரைராஜ் ஆகியோரை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் மூலம் அறிவிப்பு வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். அதேபோல் வழக்குப் பதியவும் கிரீன் சிக்னல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேருவை திருச்சி சிவா வீட்டிற்கே அனுப்பி வைத்தார். இதனிடையே அதன் பிறகு அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை இன்னும் ரத்தானது போல் தெரியவில்லை.

இந்நிலையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் காஜாமலை விஜயும், துரைராஜும் பங்கேற்றது திருச்சி சிவா எம்.பி. தரப்பையும், அவர்களது எதிர் தரப்பையும் கடும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. அண்ணா அறிவாலய ஊழியர்கள் இவர்களை கூட்ட அரங்கிற்குள் அனுமதித்ததன் மூலம் உதயநிதி ஸ்டாலினையே ஏமாற்றியிருக்கிறார்கள் என அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும் இது குறித்த பஞ்சாயத்து அவர் வசம் செல்லும் எனத் தெரிவிக்கப்படுகிறது. திருச்சியை போலவே இன்னும் பல நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாக அதிருப்தியில் உள்ள தி.மு.க.வினரால் பேசப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News