கோஷ்டி பூசலின் உச்ச கட்டம்: திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு
கோஷ்டி பூசலின் உச்ச கட்டமாக திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டு உள்ளது.;
திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.
கோஷ்டி பூசலின் உச்சகட்டமாக திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்களே ஓட்டு போட்ட சம்பவம் நடந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக கே. எஸ். அழகிரி உள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே முன்னாள் காங்கிரஸ் தலைவர்களால் நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
தமிழக காங்கிரசை பொறுத்தவரை கே எஸ் அழகிரி கோஷ்டி, முன்னாள் தலைவரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் எம்பி கோஷ்டி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கோஷ்டி ,முன்னாள் மத்திய மந்திரி தங்கபாலு கோஷ்டி, ஈவிகேஎஸ் இளங்கோவன் கோஷ்டி என பல பிரிவுகளாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த மாநகர் மன்ற உறுப்பினர் ஜவகர் திடீர் என நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மாமன்ற உறுப்பினர் எல். வி. ரெக்ஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உத்தரவின்படி இந்த நியமனம் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜவகர் கட்சியின் மூத்த நிர்வாகி ஆவார். அவரை திடீர் என நீக்கிவிட்டு மிகவும் இளைஞரான ரெக்ஸ் நியமனம் செய்யப்பட்டது காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் இடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் ரெக்ஸ் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரின் உதவியாளர் ஆவார். அவரது தீவிர ஆதரவாளராகவும் இருந்து வருகிறார்.
திருநாவுக்கரசு தனது தனிப்பட்ட செல்வாக்கை வளர்ப்பதற்காக தலைவர் பதவியில் இருந்த ஜவகரை நீக்கி விட்டு ரெக்சை நியமனம் செய்துள்ளதாக குற்றம் சாட்டி வந்தார்கள். இந்த நிலையில் திருநாவுக்கரசரை கண்டித்து இன்று திருச்சி மெயின் கார்டு பகுதியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் திருநாவுக்கரசருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் கட்சியினர் அறிவித்திருந்தனர்.
அந்த அறிவிப்பின் அடிப்படையில் சிக்கல் சண்முகம் மற்றும் ஜெகதீஸ்வரி உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் திருநாவுக்கரசருக்கு எதிராக கோஷம் போட்டுக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் திடீரென அவர்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு தரையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.