‘ஊரை விட்டு ஓடு’ திருநாவுக்கரசர் ஆதரவாளருக்கு திருச்சி காங்கிரசார் கெடு
‘ஊரை விட்டு ஓடு’ என திருநாவுக்கரசர் ஆதரவாளர்களுக்கு திருச்சி காங்கிரசார் கெடு விதித்துள்ளனர்.
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ம.தி.மு.க.வினரை விட காங்கிரஸ் கட்சியினரே அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசர் போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவனை விட கூடுதலாக நான்கரை லட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.இதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியை தனக்கே ஒதுக்க வேண்டும் என திருநாவுக்கரசு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்தார்.
ஆனால் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியினரை அனுசரித்து செல்லவில்லை, அவர் தன்னிச்சையாக நடந்து கொண்டார் எனக்கூறி அவருக்கு இந்த முறை திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சீட் வழங்கக் கூடாது என காங்கிரசார் போர்க்கொடி தூக்கினார்கள். சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டார்கள். மேலும் போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டினார்கள். இதன் காரணமனவர்களை திருநாவுக்கரசர் கட்சியை விட்டு நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தார். மேலும் தனது ஆதரவாளர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் பதவி அளித்தார். இதன் காரணமாக திருநாவுக்கரசருக்கு எதிரான போக்கு காங்கிரசார் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் மண்ணின் மைந்தருக்கே திருச்சியில் சீட் வழங்க வேண்டும் என காங்கிரசார் வெளிப்படையாக கோஷமிடத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில் தான் திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பிடுங்கி ம.தி.மு.க.விற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருநாவுக்கரசருக்கு எதிராக போர்க் கொடி தூக்கி வந்த காங்கிரசார் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ‘.
காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் ஆடியோ பதிவேற்றி உள்ளார்கள். அந்த பதிவில் ஒரு வழியாக திருநாவுக்கரசரை ஊரை விட்டு ஓட வச்சாச்சி. இனி அவரது ஆதரவாளர்களும் திருச்சியை விட்டு வெளியேற வேண்டும் இது உண்மையான காங்கிரஸ் நண்பர்களின் கோரிக்கை . திருநாவுக்கரசருடன் வந்த காங்கிரசாரில் பெரும்பாலானவர்கள் அதிமுகவினர். அவர்கள் திருநாவுக்கரசர் எந்த ஊரில் இருக்கிறாரோ அந்த ஊரில் போய் மாவட்ட தலைவர் பதவி வாங்கிக் கொள்ளட்டும். திருச்சியை விட்டு கிளம்பினால் போதும் இது உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கை என ஆடியோ பதிவிட்டுள்ளனர். இந்த ஆடியோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.