தேர்தலுக்கு தேர்தல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சி

தேர்தலுக்கு தேர்தல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

Update: 2024-03-19 17:19 GMT

தமிழக அரசியல் வரலாற்றில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆகிறது. இக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். தான் சார்ந்த வன்னியர் இன மக்களுக்கு இட ஒதுக்கீட்டிற்காக தொடங்கப்பட்ட இந்த கட்சியானது பின்னர் சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது என்பது தான் இக்கட்சியின் வரலாறு.

அதிரடி அரசியலுக்கு பெயர் போன கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சி தான். கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் சாதிக்கட்சி என முத்திரை குத்தப்பட்டதால் மற்ற அரசியல் கட்சிகள் இதனுடன் கூட்டணி அமைக்க தயங்கின. அந்த நேரத்தில் தனது சாதி சார்ந்த பகுதிகளில் தனியாக நின்று தனது கட்சியின் பலம் என்ன என்பதை நிரூபித்து காட்டி அனைத்து அரசியல் கட்சிகளையும் தன்னை தேடி வர வைத்தார் டாக்டர் ராமதாஸ்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) அறிவித்திருக்கிறது. அ.தி.மு.க-வுடனான கூட்டணிக்கு மாற்றாக, பா.ஜ.கவை அக்கட்சி தேர்வுசெய்தது ஏன்?

இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது தெரியுமா?

வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கப்போவதாக பா.ம.க அறிவித்திருக்கிறது. திங்கட்கிழமையன்று (மார்ச் 18) மாலை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 19) காலை செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. இந்தியாவிலேயே மிகப் பெரிய வெற்றியைப் பெறும்," என்று தெரிவித்தார்.

பா.ஜ.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக நடக்காத நிலையில், பா.ம.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணி அமைக்கும் என்றும் அ.தி.மு.க-வுடன் பாமக கூட்டணி அமைக்கும் என்றும் செய்திகள் மாறிமாறி வெளிவந்த வண்ணமிருந்தன.

கடந்த வார இறுதியில் அக்கட்சி பா.ஜ.க-வுடன் கூட்டணியை இறுதிசெய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அடுத்த நாளே அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஞாயிற்றுக் கிழமையன்று சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ அருள், எடப்பாடி கே. பழனிச்சாமியை அவரது சென்னை இல்லத்தில் சென்று சந்தித்த நிலையில் கிட்டத்தட்ட அ.தி.மு.க-வுடன் கூட்டணி இறுதிசெய்யப்பட்டதாகவே சொல்லப்பட்டது.

இந்நிலையில்தான் திங்கட்கிழமையன்று மாலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், "கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்களுடனும் பேசினோம். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சேலத்தில் பிரதமர் நரேந்திர மோதியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கக்கூடும்," என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுப் பிரிவில், வன்னியர்களுக்கென 10.5% இட ஒதுக்கீட்டு அளிக்கப்பட்டது. இது பா.ம.கவின் நீண்ட காலக் கோரிக்கைக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரமாகவே பார்க்கப்பட்டது. ஆகவே, அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணியே அமையும் ஊடகங்கள் தொடர்ந்து பேசிவந்தன. ஆனால், திடீர் திருப்பமாக பா.ஜ.கவுடன் கூட்டணியை அமைத்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருந்தது பா.ம.க. ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தக் கூட்டணி முறிந்துவிட்ட நிலையில், இந்த முறை பா.ம.க எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்தது.

இந்த நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி போட்டு பிரதமர் மோடியுடனும்  மேடையில் ஏறி அதனை உறுதி படுத்தி விட்டது.‘

தேர்தலுக்கு தேர்தல் தனது கட்சியின் கொள்கை மற்றும் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது அக்கட்சிக்கு கைவந்த கலையாக உள்ளது. 34 ஆண்டுகள் முடிநது 35 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில் பாமக ஆளும் கட்சியாக வர முடியவில்லையே என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதங்கப்பட்டு உள்ளார். தேர்தலுக்கு தேர்தல் நிலைப்பாடு மாற்றம் கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா?

Tags:    

Similar News