முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பூலான் தேவியின் கடைசி நாள் இதே ஜூலை 25

பூலான் தேவி கடைசி நாள் இதே ஜூலை 25 -ஜுலை மாத இறுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்

Update: 2021-07-25 05:44 GMT

பூலான் தேவி

பூலான் தேவி கடைசி நாள் இதே ஜூலை 25  -ஜுலை மாத இறுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்,


"எம்.பி"யாகி இருந்ததால் பூலான்தேவிக்கு டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே உள்ள அசோகா ரோட்டில் 44_ம் எண் வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது. பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் காலங்களில் பூலான்தேவி அந்த வீட்டில் தங்கி இருந்து, சபைக்கு சென்று வருவது வழக்கம். 2001_ம் ஆண்டு ஜுலை மாத இறுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது.

எனவே, பூலான்தேவி டெல்லி வந்து பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். 25_7_2001 அன்று பாராளுமன்ற கூட்டத்துக்கு சென்ற பூலான்தேவி பகல் 1_30 மணி அளவில் மதிய சாப்பாட்டிற்காக காரில் வீடு திரும்பினார். அவருடன் பாதுகாவலர் பல்வீந்தர்சிங் சென்றார். வீட்டு முன் சென்று கார் நின்றதும் பூலான்தேவி இறங்கினார்.

அப்போது திடீரென தோன்றிய 3 மர்ம மனிதர்கள் பூலான் தேவியை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள். அப்போது `கேட்'டை திறப்பதற்காக முன்னால் இறங்கிய பல்வீந்தர்சிங்கை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர். இதை பார்த்ததும் பல்வீந்தர்சிங், மர்ம மனிதர்களை நோக்கி திருப்பி சுட்டார். ஆனால் அவரையும் அந்த மர்ம மனிதர்கள் சுட்டு வீழ்த்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்டு, வீட்டிற்குள் இருந்த வேலைக்காரர்கள் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பூலான்தேவியையும், பாதுகாவலர் பல்வீந்தர்சிங்கையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பூலான்தேவியின் உயிர் பிரிந்து விட்டது. டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

கணவரும், உறவினர்களும் கதறி அழுதனர். பூலான்தேவியின் உடலில் 5 குண்டுகள் பாய்ந்து இருந்தன. அதில் 3 குண்டுகள் தலையை ஊடுருவி இருந்தன. 2 குண்டுகள் மற்ற இடங்களில் பாய்ந்து இருந்தன. பாதுகாவலர் பல்வீந்தர்சிங் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பூலான்தேவி சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பூலான்தேவியின் சொந்த தொகுதியான மிர்சாபூரில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. உத்தரபிரதேச மாநிலத்தில் "முழு அடைப்பு" நடந்தது.

பூலான்தேவியை கொன்ற மர்ம மனிதர்கள் 3 பேரும் பச்சை நிற மாருதி காரில் வந்தனர். பூலான்தேவியை எதிர்பார்த்து அவரது வீட்டு அருகில் காத்திருந்தனர். பூலான்தேவி காரை விட்டு இறங்கியதும், அவரை சுட்டு விட்டு, அதே காரில் தப்பிச் சென்றனர். போலீசார் பின் தொடர்ந்து வந்து பிடித்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றதும், அந்தக் காரை ரோட்டில் அனாதையாக விட்டுவிட்டு, "ஆட்டோ"வில் ஏறிச்சென்று விட்டனர். கொலையாளிகள் விட்டுச்சென்ற காரை போலீசார் கைப்பற்றினர். காருக்குள் 2 கைத்துப்பாக்கிகள், 9 காலி தோட்டாக்கள், 15 சுடப்படாத குண்டுகள், 2 முகமூடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட அந்த குண்டுகள், வெளிநாட்டுத் துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடியவை. எனவே, கொலைக்கு வெளிநாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு, பூலான்தேவியின் உடல் அவருடைய வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பிரதமர் வாஜ்பாய் சென்று, மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பூலான்தேவியின் தாயார் மூலாதேவிக்கு ஆறுதல் கூறினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் பூலான்தேவியின் உடல் தனி விமானத்தில் வாரணாசி கொண்டு செல்லப்பட்டது. அந்த விமானத்தில் பூலான்தேவியின் தாயார் மூலாதேவி, கணவர் உமத்சிங், சகோதரிகள் முண்ணி, ருக்மணி, மைத்துனர் ஹர்கோவிந்த் ஆகியோரும் சென்றனர். வாரணாசி போய்ச் சேர்ந்ததும் பூலான்தேவியின் உடல் வேன் மூலம் மிர்சாபூருக்கு கொண்டு செல்லப்பட்டு சுடு காட்டில் தகனம் செய்யப்பட்டது.😇

Tags:    

Similar News