தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் முக்கிய அவசர ஆலோசனை கூட்டம் இணைய வழி சந்திப்பு வாயிலாக நடைபெற்றது;

Update: 2021-06-14 05:59 GMT

மாதிரி படம்

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் முக்கிய அவசர ஆலோசனை கூட்டம் இணைய வழி சந்திப்பு

"ஆவின் நிறுவனத்தின் இழப்பை சரி செய்ய தமிழகம் முழுவதும் பால் முகவர்களோடு நேரடி வர்த்தக தொடர்பு, ஆவின் பாலுக்கு ஒரே விற்பனை விலை, சதவிகித அடிப்படையில் விற்பனை கமிஷன் வழங்குவதே நிரந்தர தீர்வாக இருக்கும்." -பால் முகவர்கள் சங்க இணைய வழி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் பெருவாரியான இடங்களை வென்று ஆட்சி பொறுப்பேற்ற திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வகையில் ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3.00ரூபாய் குறைத்து, மாண்புமிகு தமிழக முதல்வராக பதவியேற்ற மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு அது மே-16ம் தேதி முதல் அமுலுக்கு வந்தது.

ஆவின் பால் விற்பனை விலை குறைப்பிற்கு பின்னர் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்வதாக கூறி ஆவின் பால் விற்பனை செய்து வரும் பால் முகவர்களுக்கு தமிழகம் முழுவதும் ஆவின் அதிகாரிகளால் இன்றளவும் பல்வேறு பிரச்சினைகள், இடையூறுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

எனவே அது தொடர்பாக எழுந்து வரும் பல்வேறு பிரச்சினைகள், ஆவின் பால் விற்பனை விலை விவகாரத்திலும், விநியோக நிலையிலும் இரட்டை வேடம் போடும் ஆவின் நிர்வாகத்தால் நிலவும் அசாதாரண சூழ்நிலை, அதுமட்டுமின்றி ஆவின் நிறுவனத்தில் உள்ள C/F, WSD போன்ற இடைத்தரகர்களால் பால் முகவர்கள் சந்தித்து வரும் இன்னல்களுக்கான தீர்வு குறித்து விவாதித்து பால் முகவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவு செய்ய தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் முக்கிய அவசர ஆலோசனை கூட்டம் இணைய வழி சந்திப்பு (Zoom Meeting) மூலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை 13.06.2021) இரவு 9.00மணியளவில் நடைபெற்றது.

சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் தலைமையில் மாநில பொருளாளர் திரு. எஸ்.முருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு எஸ்.எம்.குமார் மாநில அமைப்புச் செயலாளர் திரு. எஸ்.தாழமுத்து ஆகியோரது முன்னிலையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் தினசரி தேவையான 1கோடியே 50லட்சம் லிட்டர் பாலில் சுமார் 84% தேவையை (அதாவது சுமார் 1கோடியே 25லட்சம் லிட்டர்) பூர்த்தி செய்யும் அனைத்து தனியார் பால் நிறுவனங்களில் ஒவ்வொரு நிறுவனங்களும் தாங்கள் விற்பனை செய்யும் பாலிற்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலை, அதற்கான விற்பனை கமிஷன் தொகையை தமிழகம் முழுவதும் ஒரே நிலையில் மாறுபாடின்றி வழங்கி, பால் முகவர்களோடு நேரடியான வர்த்தக தொடர்புகளை கொண்டிருக்கும் போது சுமார் 16%தேவைகளை (அதாவது தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு வெறும் 25லட்சம் லிட்டர்) மட்டுமே பூர்த்தி செய்யும் ஆவின் நிறுவனம் மட்டும் மாவட்டத்திற்கு மாவட்டம் ஒவ்வொரு நிலையில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை, மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபாடான விற்பனை கமிஷன் தொகை வழங்குவதோடு, விநியோக முறையிலும் மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபாடான நடைமுறைகளை பின்பற்றி C/F, WSD போன்ற இடைத்தரகர்கள் முறையை அமுல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் ஆவின் பல கோடி ரூபாய் இழப்பை சந்திப்பதோடு, பால் முகவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகிறது, பொதுமக்களும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு மேல் கொடுத்து ஆவின் பாலினை வாங்க வேண்டிய சூழல் உருவாகிறது.

மேலும் விழுப்புரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் சமன்படுத்தப்பட்ட பால் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ஒரு லிட்டர் 45.00ரூபாய், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் 49.00ரூபாய் அதுவே சென்னை போன்ற ஒரு சில மாவட்டங்களில் 44.00ரூபாய், 48.00ரூபாய் என்கிற நிலையில் இருக்கிறது. அது போலவே தான் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை திருச்சி, சேலம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சதவிகித அடிப்படையில் உள்ள நிலையில் சென்னை போன்ற பல்வேறு மாவட்டங்களில் மாறுபாடான வகையில் உள்ளது

எனவே தற்போது தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு மாவட்டம் ஒவ்வொரு நிலையில் ஆவின் பாலுக்கு அதிகபட்ச சில்லறை விற்பனை விலை இருப்பதை ரத்து செய்து ஒரே அளவில் நிர்ணயம் செய்வதோடு, ஆவின் பாலுக்கான விற்பனை கமிஷன் தொகையை சதவிகித அடிப்படையில் மாற்றி அதனை குறைந்தபட்சம் 10% ஆக வழங்குவதோடு, C/F, WSD போன்ற இடைத்தரகர்கள் முறையை முற்றிலுமாக ஒழித்து பால் முகவர்களுக்கு நேரடி வர்த்தக தொடர்புகளை தந்திட வேண்டும் என்கிற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் C/F, WSD போன்ற இடைத்தரகர்கள் முறையை முற்றிலுமாக ஒழித்து ஆவின் நிறுவனத்தோடு பால் முகவர்களுக்கு நேரடி வர்த்தக தொடர்பு, ஆவின் பாலுக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலை மற்றும் சதவிகித அடிப்படையில் விற்பனை கமிஷன் தொகை நிர்ணயம் செய்து தமிழகம் முழுவதும் ஒரே நிலையில் கொண்டு வருதல், பால்வளத்துறை நலவாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி "தமிழகம் தழுவிய மாபெரும் கையெழுத்து இயக்கம்" நடத்துவது எனவும் அதனை வரும் புதன்கிழமை (16.06.2021) அன்று சென்னையில் துவக்கி வைப்பது என்கிற தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த இணைய வழி சந்திப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட தீர்மானங்களை தமிழக முதல்வர் கவனத்திற்கும்,  பால்வளத்துறை அமைச்சர் ஆவடி. சா.மு.நாசர் கவனத்திற்கும் கொண்டு செல்வதோடு, புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமியை நேரில் சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து ஆவின் பாலுக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலை, விற்பனைக்கான கமிஷன் தொகை மற்றும் விநியோகம் தொடர்பாக சமூக தீர்வு காண்பது என்கிற தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த இணைய வழி சந்திப்பில் கலந்து கொண்டவர்களை சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர்கள் எஸ்.ஜெயசந்திரன் வரவேற்றார். எஸ்.வெங்கடேசபெருமாள் நன்றி தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஆத்திதுரை, முகமது முகையதீன், ஜாகிர் உசேன், டி.எம்.எஸ்.காமராஜ், குமரேசன், ஜெயப்பிரகாஷ், வில்லியம் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பால் முகவர்கள், சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News