விஜய் கட்சி மாநாடு: அக்டோபர் 3-வது வாரத்தில் நடத்த திட்டம்
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை அக்டோபர் 3-வது வாரத்தில் நடத்த கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி கட்சியின் கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தி, முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கை, கொடியின் விளக்கம், கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து விளக்குவதாக அறிவித்தார். இது விஜய் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சேலம், திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மாநாடு நடத்துவதற்கான இடத்தை பார்வையிட்டனர். இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.
அதனை தொடர்ந்து வருகிற 23ம் தேதி மாநாடு நடத்துவதற்கு பாதுகாப்பு அளித்திட அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிடையில் முதல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த பல்வேறு கெடுபிடி போடப்பட்டதால், அதற்கான பணிகள் தொடங்காமல் உள்ளது. மேலும் 23ம் தேதி திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுமா? என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் ஜாதகப்படி மாநாட்டை அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் நடத்தலாம் என ஜோதிடர் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை அக்டோபர் 3-வது வாரத்தில் நடத்த கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாட்டுக்கு அனுமதி கேட்டு மீண்டும் காவல்துறையிடம் கடிதம் வழங்கவும் தவெக திட்டமிட்டுள்ளது.