முதலீட்டாளர்கள் மாநாட்டினால் மாறிய தமிழக அரசியல்: அண்ணாமலை விமர்சனம்
சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டினால் தமிழக அரசியல் நிலை மாறி இருப்பதாக அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தேர்தலின் போது அதானி குழுமத்தை விமர்சித்த தி.மு.க. தலைவர்கள், இன்று அவர்களின் முதலீடுகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த மநாட்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கினை எட்டுவதற்கான செயல்திட்ட அறிக்கை, மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை 2024-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், செங்கல்பட்டில் அமையவுள்ள கோத்ரேஜ் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ.177 கோடியில் குவால்காம் நிறுவன வடிவமைப்பு மையத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், காஞ்சிபுரம் மாவட்டம் - பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் தயாரிப்பு தொழிற்சாலையையும் திறந்து வைத்தார். மேலும், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள க்வால்காம் டிசைன் சென்டரை திறந்து வைத்தார். இதேபோன்று பல்வேறு நிறுவனங்களின் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இது தவிர, டாடா நிறுவனம் சார்பில் ரூ.12,800 கோடி முதலீடு செய்ய முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.10,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ரூ.16,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கோத்ரேஜ் நிறுவனத்தின் உலகளாவிய விநியோக மையம் ரூ.515 கோடி முதலீட்டில் செங்கல்பட்டில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம், பெகாட்ரான் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஆகியவை கையெழுத்தாகின.
இது குறித்து முதலமைச்சர் கூறுகையில், "எங்களுடைய அயராத உழைப்பு மற்றும் உங்களுடைய பங்களிப்பு காரணமாக, இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை, இந்தியாவே உற்றுநோக்கும் இந்த அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த மாநாடு குறித்து பேசிய தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை, "தி.மு.க.வினர் இதற்கு முன்பு தேர்தலின் போது அதானி குழுமத்தை மிக தவறாக பேசியுள்ளனர். அதானி மோடியின் சொத்து, அதானிக்கும் பா.ஜ.க.வுக்கும் சம்பந்தம் இருக்கிறது, பா.ஜ.க.விற்கு அதானிதான் நிதியளிக்கிறார் என விமர்சித்திருந்தனர். ஆனால், அதானியிடமிருந்து ரூ.42,768 கோடி அளவுக்கு முதலீடுகள் வந்த பிறகு தி.மு.க. தலைவர்களும், முதலமைச்சரும் பாராட்டியுள்ளார்கள். அம்பானி, டாடா குழுமங்களின் முதலீடுகள், அவர்கள் தமிழகம் பற்றி பெருமையாக கூறியது போன்றவற்றை சுட்டிக்காட்டி தி.மு.க. தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆக அரசியலை விட்டுவிட்டு கட்சிகள் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பதை இந்த மாநாடு நமக்கு சொல்லுகிறது" என்று கூறியுள்ளார்.