தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக அமைச்சருக்கு திடீர் மயக்கம்

தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக அமைச்சருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பானது.

Update: 2024-03-27 15:10 GMT

மயக்கம் வந்ததால் அமைச்சர் நேரு பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய காட்சி.

தனது மகன் அருண் நேருவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அமைச்சர் கே.என்.நேரு, திடீரென தனக்கு மயக்கம் வருவதாக கூறி, பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி மருத்துவமனைக்குச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக திமுக முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அருண் நேரு, தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். கிராமம் கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார் அருண் நேரு.

பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் அருண் நேருவை எதிர்த்து அதிமுக நேரடியாக களமிறங்குகிறது. அதிமுக சார்பில் சந்திரமோகன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். சிட்டிங் எம்.பி பாரிவேந்தர், தாமரை சின்னத்தில் பெரம்பலூரில் போட்டியிடுகிறார். இதனால் களம் உக்கிரமாகத் தகிக்கிறது.

பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் கே.என்.நேரு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இன்று காலை கொசூர் பகுதியில் இருந்து பிரச்சாரம் மேற்கொண்டார் அமைச்சர் நேரு. அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பிரச்சார வாகனத்தில் நின்றிருந்த அமைச்சர் கே.என்.நேரு, திடீரென, "எனக்கு மயக்கமாக வருகிறது. ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டுச் செல்கிறேன். எனது துறையின் கீழ் வரும் குடிநீர் வாரிய பிரச்சினைகளை இப்பகுதியில் 6 மாதங்களில் கண்டிப்பாக தீர்த்து வைப்பேன்" என்று கூறிவிட்டு உடனடியாக பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு, பிரசார வாகனத்திலிருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. வெயில் கொளுத்தி வரும் நிலையில், பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் நேரு மயக்கம் வருவதுபோல இருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News