கஞ்சா விற்பனையில் தான் தமிழகம் முதலிடம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கஞ்சா விற்பனையில் தான் தமிழகம் முதலிடம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி பேசினார்.

Update: 2024-04-02 16:45 GMT

தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி.

கிருஷ்ணகிரியில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, இந்தியாவில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு ஆகிவிட்டது என்றும், கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் வீடு கட்டுவோர் இனி கனவில்தான் வீடு கட்ட முடியும் என்று பேசினார்.

தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளன. இன்று கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் போதை பொருள், கஞ்சா விற்பனை, அமோகமாக நடைபெறுகிறது. திமுக கட்சி நிர்வாகிகளே போதைபொருளை அயல்நாட்டிற்கு கடத்த இருக்கும் போது எப்படி போதைப் பொருளை தடுக்க முடியும். போதைப்பொருள் கடத்தும் நபர்கள் உயர்ந்த பதவியில் இருப்பவர்களோடு நெருக்கமாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது அவர்களை யார் போய் நெருங்க முடியும். திமுகவினர்தான் இந்த போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளசாராயம் குடித்து பலபேர் இறந்து விட்டனர். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர் இறந்து போனார் அவருக்கும் 10 லட்சம் கொடுக்கிறார்கள்.

இதுதான் வேடிக்கை. சிந்தித்து பாருங்கள். போதை பொருளை தடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட அரசாங்கம் தேவைதானா.. எல்லா துறையிலும் முதன்மை வகிக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று ஸ்டாலின் பேசுவார். ஆனால், தமிழ்நாட்டில் நிலமை வேறு மாதிரியாக உள்ளது. ஊழல் செய்வதில் முதலிடம்... கஞ்சா, போதைப்பொருள் விற்பனை செய்வதில் முதலிடம். இந்தியாவில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு. இதில் எல்லாம் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. ஆட்சிக்கு வரும் முன்பு எவ்வளவோ அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். வீட்டு வரி 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டு விட்டது. மின் கட்டணம் 52 சதவிகிதம் உயர்த்தி விட்டார்கள். வரி மேல் வரி போட்டு மக்களை விடியா அரசு வாட்டி வதைக்கிறது.

கட்டுமான பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. இதனால், வீடு கட்டுவோர் கனவில்தான் வீடு கட்ட முடியும். நனவில் வீடு கட்ட முடியாது. திமுக 10 சதவிகித அறிவிப்பை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. 90 சதவிகித அறிவிப்புகளை நிறைவேற்றவில்லை. கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் கொடுப்பேன் என்றார்கள்.. செய்தார்களா?.. பெட்ரோல், டீசல் விலை குறைப்பேன் என்று சொன்னார்கள்.. பெட்ரோல் மட்டும் 3 ரூபாய் குறைத்தார்கள்.. டீசல் விலை குறைக்கவில்லை. இதனால் லாரி வாடகை உயர்ந்துவிட்டது. டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். இப்படி, விடியா திமுக ஆட்சியில் எல்லா வகையிலும் விலை உயர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News