திவாலாகும் நிலையில் தமிழக அரசு: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழக அரசு விரைவில் திவாலாகும் நிலைமை ஏற்படும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தென்மாவட்டங்கள் வளர வேண்டும் வளர்ச்சி பெற வேண்டும் என தொடர்ந்து. பா.ம.க. போராடி வருகிறது. 2000 ஆம் ஆண்டில் நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்கி 23 ஆண்டுகளாகியும் 13 நிறுவனங்களில் 600 பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது. இன்னமும் நாங்குனேரி சிறப்பு பொருளாதர மண்டலம் வளர்ச்சி அடையவில்லை.
நெய்வேலியில் நடைபெற்ற போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டம். அந்தப் போராட்டத்தில் காவல்துறையினரை ஏவி விட்டு தொண்டர்கள் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. பதட்டமான சூழ்நிலை உருவாக்கியது காவல்துறை.
தி.மு.க. அரசுக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் சொல்லிக் கொள்வது எல்லாம் விவசாய விரோத போக்கை கடைபிடிக்க கூடாது என எச்சரிக்கை விடுகிறேன். உங்களது கவுண்டவனை என்.எல்.சியில் தொடங்காதீங்க. நெய்வேலியில் நடந்தது விவசாயிகள் போராட்டம் மட்டுமல்ல தமிழ் சமூகத்திற்கான போராட்டம். மனசாட்சியில்லாமல் பேய் போல் என்.எல்.சியில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். என்.எல்.சி. அதிகாரிகள் ஆதரவுடன் தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
தயவுசெய்து என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்றைய போராட்டம் வெறும் சாம்பிள் தான். என்.எல்.சியை விட்டு விடுங்கள் அது உங்கள் வேலை கிடையாது மண்ணுக்கும் மக்களுக்குமான போராட்டம். நாங்கள் சொன்னால் கோடிகணக்கானோர் ஒன்று திரள்வார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இளைஞர்களும் ஒன்றிணைந்து என்.எல்.சி.க்கு எதிராக போராட்டத்தை நடத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் என்.எல்.சி. போன்ற விளைநிலங்களை கையகப்படுத்தி நாசப்படுத்தினால் இரண்டு ஆண்டுகளில் அரிசி ரூபாய் 500-க்கு மேல் விற்கப்படும். 2000 போலீஸை வைத்து விவசாயிகளை அச்சுறுத்திவருவது கோழைத்தனம் ஆகும்.
தங்கம் தென்னரசுக்கு எச்சரிக்கை விடுகிறேன். நிலத்தை அழித்தால் சோறு கிடைக்காது என நீதிபதி சொல்லியும் இன்று மீண்டும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி திட்டம் வளர்ச்சி திட்டம் கிடையாது. மண்ணையும் மக்களையும் அழிக்கும் திட்டம் எங்களுக்கு வேண்டாம்.
ஜி-20 மாநாட்டில் சுற்று சூழல் அமைச்சர்கள் ஒன்றிணைந்து நிலக்கரி பயன்பாட்டை குறைப்பதை பற்றி பேசப்பட்டது. ஆனால் அங்கிருந்து சில கிலோமீட்டரில் விவசாய நிலத்தை அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறிவிட்டது.தமிழகத்தின் மின்சாரம் வெளி மாநிலத்திற்கு விற்கும் நிலை உருவாகிவிட்டது என்றால் என்.எல்.சிக்கு எதற்கு நிலம்.
கோடி கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சி கடலுக்கு அனுப்பி கொண்டிருக்கும் மோசமான திட்டம் என்.எல்.சியில் நடக்கிறது. என்.எல்.சியில் இருந்து சில கிலோமீட்டரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்த வரவேண்டும்.
தங்கம் தென்னரசு பள்ளியில் படிக்கும் போதிருந்தே என்.எல்.சிக்கு எதிராக பா.ம.க. போராட்டம் நடத்தி வருகிறது. அமைதியாக நடத்திவந்த போராட்டத்தில் காவல்துறையை ஏவிவிட்டு வன்முறையை உருவாக்கி உள்ளனர். என்.எல்.சிக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தை நான் முன்னெடுத்து வந்துள்ளேன்.
தாமிரபரணி நதி இணைப்பு திட்டம் பல ஆண்டுகளக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனையெல்லாம் தமிழக நிதி துறை அமைச்சர் பார்க்கட்டும். தமிழகத்தில் கடன் சுமையை தங்கம் தென்னரசு குறைக்கட்டும். கடன் வாங்கவில்லை என சபாநயகர் கூறிவருகிறார். அவருக்கு ஒருகடிதம் எழுத வேண்டும். கடனை அடைக்க கடன் வாங்கியது தி.மு.க. ஆட்சியில் தான். இந்த வேடிக்கை வேறு எங்கும் பார்க்க முடியாது.
தமிழகத்தின் மொத்த கடன் 12.53 லட்சம் கோடி. இதில் பொதுத்துறை கடன் 4.5 லட்சம் கோடி, நிர்வாகத்துறை கோடி 7.25 லட்சம் கோடி. அ.தி.மு.க. ஆட்சி கடன் வாங்கிகொண்டு இருக்கிறார்கள் என திமுக குறை சொன்னது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளனர். இந்த ஒரு ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 43 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
பழைய கடனை அடைத்து அதற்கு வட்டி கட்டுவதற்கு 51 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். கடன் தொடர்பான இதே நிலை தொடர்ந்தால் தமிழகம் திவாலாகிவிடும். நாங்கள் டெல்லி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம்.தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை. அமித்ஷா கூட்டத்தில் கலந்து கொள்வதை விட நேற்றைய தினம் மிகப்பெரிய பிரச்சனைக்கான போராட்டத்தில் இருந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.