ஜார்கண்டில் திடீர் அரசியல் மாற்றம்: முதல்வராகிறார் கல்பனா ஹேமந்த் சோரன்

ஜார்கண்டில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் மாற்றத்தின் காரணமாக கல்பனா ஹேமந்த் சோரன் புதிய முதலம்வராகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2024-01-30 13:50 GMT
மனைவி கல்பனாவுடன் முதல்வர் ஹேமந்த் சோரன்.

பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இந்தியாவை அல்ல இந்தியா கூட்டணியை கதிகலங்க வைத்தது.  ஆர்.ஜே.டி. கூட்டணியில் இருந்த முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து அந்த கூட்டணிக்கு முடிவு கட்டி விட்டு பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகி விட்டார். இந்த பரபரப்பு இன்னும் அடங்கவில்லை.

இந்த நிலையில் தான் தற்போது ஜார்க்கண்ட் மாநிலமும் பரபரப்பாகி இருக்கிறது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் நாளை கைது செய்யப்படக் கூடும், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் அவரது மனைவி கல்பனா, புதிய முதல்வராக பதவியேற்பார் என்கின்றன ஜார்க்கண்ட் அரசியல் வட்டாரங்கள்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை அமலாக்கத்துறையானது சுரங்க முறைகேடு ஊழல் வழக்கை முன்வைத்து அதகளப்படுத்தி வருகிறது. முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மொத்தம் 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அண்மையில்தான் ஒரே ஒருமுறை அமலாக்கத்துறை விசாரணைக்காக ஹேமந்த் சோரன் ஆஜரானார். இதனையடுத்து ஜனவரி 29 அல்லது ஜனவரி 31-ல் மீண்டும் ஆஜராகவும் சம்மன் அனுப்பி இருக்கிறது அமலாக்கத்துறை

இந்த நிலையில் டெல்லி சென்ற ஹேமந்த் சோரனை விசாரிக்க அமலாக்கத்துறை முயற்சித்தது. ஆனால் டெல்லி பங்களாவில் ஹேமந்த் சோரன் இல்லை என தெரியவந்தது. ஹேமந்த் சோரனுக்காக பல மணிநேரம் காத்திருந்தும் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தத்தளித்தது அமலாக்கத்துறை. இதனால் ஹேமந்த் சோரன் 30 மணிநேரமாக மாயமாகிவிட்டார் என தகவலும் பரவியது. இதனைத் தொடர்ந்து இன்று ராஞ்சி வந்த ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனாவும் கலந்து கொண்டார். ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் அவருக்கு பதிலாக கல்பனா முதல்வராக பொறுப்பேற்பார் என்பதாலேயே எம்.எல்.ஏக்கள் அவசர கூட்டத்தை ஹேமந்த் சோரன் கூட்டியிருந்தார்.

மேலும் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஹேமந்த் சோரன் பங்களா, ராஜ்பவன் மற்றும் அமலாக்கத்துறை அலுவலக பகுதிகளில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ஹேமந்த் சோரன் நாளை அமலாக்கத்துறை விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்டால் ஜார்க்கண்ட்டில் ஆட்சியை கைப்பற்றவும் பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு புதிய ஆட்சி அமைக்க பாஜக தீவிரமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகாரில் திடீரென முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியை உதறிவிட்டு பாஜகவுடன் மீண்டும் இணைந்து மீண்டும் முதல்வராக பதவியேற்ற பரபரப்புக்குள் ஜார்க்கண்ட் அரசியலில் புதிய பஞ்சாயத்து கிளம்பியிருக்கிறது.

ஜார்கண்ட் முக்திமோர்ச்சா எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் மனைவி கல்பான முதல் அமைச்சர் ஆவாரா? அல்லது பாஜ நடத்தும் குதிரை பேரத்தின் மூலம் ஆட்சி கவிழுமா என்பது நாளை விடிந்தால் தான் தெரியும்.

Tags:    

Similar News