தேர்தல் பத்திரம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ஸ்டாலின் வரவேற்பு

தேர்தல் பத்திரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-15 13:18 GMT

முதல்வர் ஸ்டாலின்.

தேர்தல் பத்திரம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியானதே என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-18 ஆம் நிதியாண்டுக்கு மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து இந்த திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. தேர்தல் பத்திரங்களை நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும். ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

தனிநபர்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் என யார் வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு இந்த தேர்தல் பத்திரங்கள் வழியாக நன்கொடை அளிக்கலாம். மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். இதுவே தேர்தல் காலத்தில் மட்டும் மாதம் முழுவதும் விற்பனை செய்யப்படும். தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்களின் விவரம் எதுவும் இருக்காது.

இதனால், இந்த தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. மேலும் இது தொடர்பாக தேர்தல் பத்திர திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரம் என்பது சட்ட விரோதமானது என்றும் அவற்றை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டுள்ளது. ஸ்டாலின் வரவேற்பு: உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியானதே என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியானது தான். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தேர்தலில் நேர்மையை உறுதி செய்யும். இதேபோல், அரசியல் கட்சிகளுக்கு, ஜனநாயகம் மற்றும் சமநிலையை மீட்டெடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags:    

Similar News