சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்! கலக்கத்தில் மாவட்ட செயலாளர்கள்!
ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தில் பெரும்பாலான நேரத்தை கட்சி நிர்வாகிகளை எச்சரிப்பதிலும் ஊக்கப்படுத்துவதிலும் தான் செலவு செய்கிறார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.;
ஸ்டாலின் பிரசார சுற்றுப்பயணத்தில், பிரசாரத்திற்கு பின் பெரும்பாலான நேரத்தை மாவட்ட கட்சி நிர்வாகிகளை எச்சரிப்பதிலும் ஊக்கப்படுத்துவதிலும் தான் செலவு செய்கிறார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர், கூட்டணி கட்சி தொகுதி உட்பட ஒவ்வொரு தொகுதிக்கும் இவ்வளவு கவனம் செலுத்தி வருவது கட்சியினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த கவனத்திற்கு காரணம், மாறி வரும் கள நிலவரம் தான் என்கின்றனர். நிலைமை அவ்வளவு சீராக இல்லை, வேகமாக மாறி வருகிறது என்று, ஸ்டாலினிடம் கொடுக்கப்படும் உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 39/39 என்று இல்லாவிட்டாலும், 35 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றினால் தான், அடுத்த இரண்டு ஆண்டுகளை சுமுகமாக கடத்த முடியும், 2026ஐ தைரியமாக சந்திக்க முடியும் என்று ஸ்டாலின் எண்ணுகிறார். அதனால், உளவுத்துறை அறிக்கைகள் அவரை கவலையில் ஆழ்த்தி உள்ளன.
வேட்பாளர்கள் உறுதியாகி களத்தில் இறங்கிய பின், ஸ்டாலினிடம் கூட்டணி கட்சியினர் பலரும் புகார் செய்கின்றனர். சில இடங்களில் தி.மு.க., வேட்பாளர்களுமே புகார் செய்கின்றனர்.
திருச்சியில் வைகோவின் மகன் துரைக்கு, லோக்கல் தி.மு.க.,வினர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என வைகோ சொல்ல, உள்ளூர் அமைச்சர்கள் நேரு மற்றும் மகேஷிடம் பேசி, 'துரையை வெற்றி பெற வைக்க வேண்டியது உங்கள் கடமை' என உத்தரவிட்டார். விளைவாக, துரையை ஜெயிக்க வைக்க நேருவும் மகேஷும் மும்முரமாக வேலை பார்க்கின்றனர்
விழுப்புரம் தொகுதியில் வி.சி., பொதுச் செயலர் ரவிக்குமார் போட்டியிடுகிறார். தொகுதியில் தான் சந்திக்கும் போராட்டங்களை, ஸ்டாலினிடம் விவரித்துச் சொல்ல, அங்கேயும் ஸ்டாலின் தலையிட்டு நிலையை சரி செய்தார்
ராமநாதபுரம் நிலவரத்தை கேட்ட ஸ்டாலின், 'நவாஸ்கனி வெற்றி பெறவில்லை என்றால் உங்கள் பதவி பறிக்கப்படும்' என்று ராஜகண்ணப்பனை எச்சரித்தார்
நெல்லை தொகுதியை சபாநாயகர் அப்பாவு, தனது மகன் அலெக்சுக்காக கேட்டார். ஆனால் தொகுதியை காங்கிரசுக்கு கொடுத்ததால் அப்செட் ஆனார். மேலும் காங்கிரஸ் வேட்பாளர் புரூஸ் கன்னியாகுமரிக்காரர். இதில் மொத்த மாவட்ட தி.மு.க.,வுக்கும் கடுப்பு. அதனால, யாரும் புரூஸ் தேர்தல் வேலைக்கு போகவில்லை. இதனால் வெறுத்துப்போன புரூஸ், நேராக அவரோட மறை மாவட்டத்து தலைவருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லியிருக்கார்,
சில நாட்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலினுக்கு போன் செய்த சோனியா, 'எங்கள் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தோற்கும் நிலையில் உள்ளார். அதற்கு காரணம் எதிர்க்கட்சிகள் அல்ல. உங்கள் கட்சியினர் தான் என கூறியதாக சொல்கிறார்கள்..
அந்த அழைப்பால் கடும் கோபமான ஸ்டாலின், அப்பாவுவை திட்டியதோடு, தூத்துக்குடியில் கனிமொழிக்காக தேர்தல் வேலை செய்யும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அழைத்து, திருநெல்வேலிக்கு போக உத்தரவிட்டார். இப்போது, நெல்லையில் புரூசுக்காக வேலை செய்கிறார் அனிதா.
தேனி பொறுப்பாளர் அமைச்சர் மூர்த்தி, 'நம் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஜெயித்தே ஆகவேண்டும், இல்லையெனில் என் பதவி பறிபோகும்' என்று, மாவட்ட தி.மு.க.,வினரிடம் சொல்லி வருகிறார்.
இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு கதை இருக்கிறது.
எனினும் இன்றைய நிலையில், ஸ்டாலினிடம் இருந்து எப்போது அழைப்பு வருமோ என்ற திகிலில் தி.மு.க., நிர்வாகிகள் அனைவரும் பம்பரமாக சுற்றுவதாக கட்சியினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். 'இப்படியே தொடர்ந்தால் நாற்பதும் நமதே' என்று நம்பிக்கையாக இருக்கின்றனர்.