கள்ளச்சாராய சாவிற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் முதல்வர் பதவி ராஜினாமா

கள்ளச்சாராய சாவிற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Update: 2024-06-20 07:49 GMT

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமி.

கள்ளக்குறிச்சி கள்ள சாராய சாவிற்கு  பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ள சாராயம் குடித்த 37 பேர் பலியாகி உள்ளனர். கள்ள சாராயம் குடித்தவர்களில் இன்னும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ள சாராய சாவுக்கு காரணமானவர்களை பிடிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் கள்ளக்குறிச்சிக்கு வந்து நேரடி விசாரணை நடத்தி வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க இன்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று கள்ள சாராயம் குடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து மருத்துவர்களிடம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் நேரடியாக சென்று தனித்தனியாக  ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம்  பேசிய எடப்பாடி பழனிசாமி கள்ள சாராயம் விற்பனையில் திமுக பிரமுகர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். நான் ஏற்கனவே கள்ள சாராயம் தமிழகத்தில் ஆறாக ஓடுவதாக குற்றம் சாட்டினேன். திமுக அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது. கள்ள சாராய சாவுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினார். எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் சென்று இருந்தனர்.

Tags:    

Similar News