தருமபுரி பாமக வேட்பாளராக சவுமியா அன்புமணி: மாற்றத்திற்கு என்ன காரணம்?

தருமபுரி மக்களவை தொகுதி பாமக வேட்பாளராக முன்னர் அறிவிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பதிலாக சவுமியா அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-03-22 14:53 GMT

18வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 19 தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இன்று காலை காஞ்சிபுரம் தொகுதி தவிர்த்து 9 பேர் கொண்ட பாமக வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. அதில் தருமபுரி தொகுதியில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளராக பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக அரசாங்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக சவுமியா அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு பாமக தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் வேட்பாளரை தேர்வில் திருப்தி இல்லை என பெரும்பாலான தொண்டர்கள் தங்களது மனக்குமுறலை தலைமைக்கு தெரிவித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து வேட்பாளர் தேர்வு குறித்து மீண்டும் மறு பரிசீலனை செய்யப்பட்டது. அதில் பெரும்பான்மையானோர் கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.

இதையடுத்து நீண்ட நேரம் ஆலோசனைக்கு பிறகு பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, அரசாங்கம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட பாமகவினர் உற்சாகமடைந்து தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும் வேண்டும் மோடி, மீண்டும் மோடி என பாமகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

பாமக வேட்பாளர்கள் பட்டியல் 2024:

  • திண்டுக்கல் - கவிஞர் திலகபாமா
  • அரக்கோணம் - கே.பாலு
  • ஆரணி - கணேஷ் குமார்
  • கடலூர் - தங்கர் பச்சான்
  • மயிலாடுதுறை - ம.க ஸ்டாலின்
  • கள்ளக்குறிச்சி - தேவதாஸ் உடையார்
  • தருமபுரி – சவுமியா அன்புமணி
  • சேலம் - அண்ணாதுரை
  • விழுப்புரம் - முரளி சங்கர்

காஞ்சிபுரம் தொகுதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

Tags:    

Similar News