அமலாக்கதுறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சரிதான் என தீர்ப்பு
அமலாக்கதுறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சரிதான் என ஐகோர்ட்டு 3வது நீதிபதி தீர்ப்பளித்து உள்ளார்.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டப்படியே கைது செய்துள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு மூன்றாவது நீதிபதி தீர்ப்பளித்து உள்ளார்.
தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. பின்னர் தி.மு.க.வில் சேர்ந்த அவர் தற்போது மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன்மாதம் 13ந்தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டதும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியைவிடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு கடந்த 12-ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த 3 நாள் விசாரணை நடைபெற்றது.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை செந்தில் பாலாஜி விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். கைது செய்யப்பட்டவர்களை அதிகாரிகள் காவலில் எடுக்க வேண்டியது அவசியம் என இன்று தீர்ப்புஅளித்து உள்ளார்.
அந்த வகையில் நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்து உள்ளார் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன். நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு சரியானது என்று உறுதி செய்துள்ள மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமலாக்கதுறை சட்ட விதிகளின் படி தான் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. செந்தில்பாலாஜியின் சிகிச்சை நாட்களை அமலாக்கத்துறை காவல் நாட்களாக எடுத்துக்கொள்ள முடியாது. செந்தில்பாலாஜியின் சிகிச்சை முடிந்ததும் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.