பா.ஜ.க.விற்கு தாவிய சேலம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ: எடப்பாடி அதிர்ச்சி
சேலம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் பா.ஜ.க.வில் இணைந்ததால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சேலம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டது. தி.மு.க.வை விமர்சிப்பதற்கு இணையாக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.வையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து அ.தி.மு.க.வினரை சீண்டி வந்தார். அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களை அவர் நேரடியாக தாக்கிப் பேசியதால் இனியும் பா.ஜ.க.வுடன் கூட்டணியை தொடர முடியாது என அ.தி.மு.க. முடிவெடுத்தது.
அ.தி.மு.க, பா.ஜ..க கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவை உறுதிப்படுத்தியதுடன் 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். அ.தி.மு.க. தலைவர்களும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையையும், பா.ஜ.க.வையும் விமர்சித்துப் பேசி வருகின்றனர். பா.ஜ.க, அ.தி.மு.க.வை தவிர்த்து ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்கிடையே, இரு கட்சியிலும், மாறி மாறி முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ வெங்கடாசலத்தை தங்கள் பக்கம் இழுத்துள்ளது பாஜக. சேலம் 1 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக 2001 முதல் 2006 வரை பணியாற்றியவர் வெங்கடாசலம். பின்னர் 2008ல் தொகுதி மறுசீரமைப்பில் சேலம் 1,2 என இருந்த தொகுதிகள் நீக்கப்பட்டன. தொடர்ந்து, அ.தி.மு.க.வில் செயல்பட்டு வந்த வெங்கடாசலத்திற்கு சீட் வழங்கப்படவில்லை. இந்நிலையில், அவர் இன்று பா.ஜ.க.வில் இணைந்து, அ.தி.மு.க.வினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைமையகமான சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம் மற்றும் கரு.நாகராஜன் ஆகியோர் முன்னிலையில், தமது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம். பா.ஜ.க.வினரே, வேறு பார்டர் வேட்டிகளை கட்டி இருந்த நிலையில், பா.ஜ.க. கரை வேட்டி, துண்டுடன் ரெடியாக வந்து பா.ஜ.க.வில் இணைந்துள்ளார் வெங்கடாசலம்.
முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலத்தை வரவேற்று அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “இன்றைய தினம், சேலம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், ஐம்பதாண்டு காலமாக தமிழக அரசியல் தளத்தில் செயல்பட்டு வருபவருமான, வெங்கடாசலம் அவர்கள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீது கொண்டுள்ள ஈர்ப்பால், தமிழ்நாடு பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம் மற்றும் கரு.நாகராஜன் ஆகியோர் முன்னிலையில், தமது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்துள்ளார். வெங்கடாசலம் மற்றும் அவருடன் பாஜகவில் இணைந்துள்ள அனைவரையும் மனதார வரவேற்று மகிழ்வதோடு, தூயதோர் அரசியலை முன்னெடுக்கும் தமிழ்நாடு பாஜகவின் செயல்பாடுகளில், அவர்கள் ஆழ்ந்த அரசியல் அனுபவத்தையும், பங்களிப்பையும் கோருகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர் செல்வம் செய்து வரும் பிரச்சினை காரணமாக தென் மாவட்டங்களில் அ.தி.மு.க. பலவீனமாக இருப்பதாக கருதப்படுகிறது. தற்போதைய சூழலில் கொங்கு மண்டலத்தில் மட்டுமே அ.தி.மு.க. வலுவாக இருக்கிறது. இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. கோட்டையில் ஓட்டையை ஏற்படுத்தி ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.வை தங்கள் பக்கம் பா.ஜ.க. இழுத்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.