சச்சின் பைலட் மீண்டும் சர்ச்சை பேச்சு: கலக்கத்தில் காங்கிரஸ் மேலிடம்

ராஜஸ்தானில் நடந்த பேரணியில் சச்சின் பைலட் மீண்டும் சர்ச்சையாக பேசியதால் காங்கிரஸ் மேலிடம் கலக்கத்தில் உள்ளது.

Update: 2023-06-11 14:23 GMT

பொதுக்கூட்டத்தில் பேசிய சச்சின் பைலட்.

ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் நடந்த பேரணியில் சச்சின் பைலட் மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என  மீண்டும் சர்ச்சையாக பேசியதால் காங்கிரஸ் மேலிடம் கலக்கத்தில் உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலம் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. தற்போது அம்மாநிலத்தின் முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் உள்ளார். இவருக்கும் மறைந்த ராஜேஷ் பைலட்டின் மகனும்  இளம் காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டிற்கும் இடையே உள் கட்சி பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மீது ஊழல் விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என்பது சச்சின் பைலட்டின் பிரதான கோரிக்கை. ஆனால் இதனை அசோக்கெலாட் இதுவரை நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக  சச்சின் பைலட் ஒரு முறை  தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி கட்சியின் மேலிடத்தை மிரட்டினார்.

இதனை தொடர்ந்து கட்சியின் மேலிட தலைவர்கள் வந்து அசோக் கெலாட்டிடம் சச்சினின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை விசாரணை கமிஷன் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் சச்சின் பைலட் தனது தந்தையின் நினைவு நாளான ஜூன் 11ம் தேதி பேரணி நடத்தப்போவதாக அறிவித்தார். இந்த பேரணி பற்றிய அறிவிப்பை  கேட்டதும் காங்கிரஸ் மேலிடம் ஆடிப்போனது. இதற்கு காரணம் அவர் தனி கட்சி தொடங்க போகிறார் என்ற யூகம் தான்.

இந்நிலையில் திட்டமிட்டபடி சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில்  தனது தந்தையின் நினைவாக இன்று பேரணி நடத்தினார். லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்ற  பொதுக்கூட்டத்திலும் பேசினார்.


இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் நம் ஆட்சியில் ஏதாவது குறை இருந்தால், மற்றவர்களை குறை சொல்லாமல், அதை சரி செய்து கொள்ள வேண்டும். ஒருவரை இழிவு படுத்த வேண்டும் என்பதற்காக, என் கோரிக்கையை முன்வைக்கவில்லை.அரசியலில், உங்கள் கருத்தை முன்வைப்பது மிகவும் முக்கியம். அதற்காக குரல் எழுப்பினேன். இளைஞர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் எதிர்காலம். நான் எழுப்பிய குரலில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை என்றார்.

சச்சின் ஒரு புதிய கட்சியை  துவங்க போகிறார் என்ற ஊகங்கள் இருந்தன, காங்கிரஸ் தலைமை மட்டுமல்ல, மாநிலத்தில் உள்ள அனைவரும் அதிருப்தி தலைவரின் அடுத்த நகர்வை உன்னிப்பாக கவனித்து வந்தனர், ஆனால் அவரது உரையில் இது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதே சமயம், கட்சி உயர் அதிகாரிகளுடன் நடந்த கூட்டம் மற்றும் கட்சியில் ஒற்றுமைக்கான கோரிக்கைகள் குறித்து வாய்மூடியே இருந்த அவர், முந்தைய வசுந்தரா அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பினார்.

'நாங்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் என்ன சொல்கிறோம், என்ன செய்தோம் என்பதை பொதுமக்கள் எப்போதும் எடைபோடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை நம்பகத்தன்மையே மிகப்பெரிய சொத்து. இந்த நம்பிக்கையைக் குறைக்கும் எதையும் நான் ஒருபோதும் செய்யவில்லை,' என்று சச்சின் மேலும் கூறினார், பாதகமான சூழ்நிலைகளில் உண்மை மற்றும் நேர்மையுடன் சமரசம் செய்யாமல், வெளிப்படையாக பேசுவதற்கு தனது தந்தை ராஜேஷ் பைலட் கற்றுக் கொடுத்தார் என்றார்.

முந்தைய வசுந்தரா அரசாங்கத்தின் மோசடிகள் பற்றிக் குறிப்பிட்டு, மீண்டும் ஒருமுறை விசாரணை நடத்தக் கோரிய பைலட், கட்சித் தலைவராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, வசுந்தரா அரசாங்கத்தை கடுமையாக எதிர்த்ததாகக் கூறினார். 'சுரங்க ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்தாலும் பரவாயில்லை, சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதால், விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று கூறிய பைலட், ஒவ்வொரு தவறுக்கும் தண்டனை தேவை என்றார்.

இந்நிகழ்ச்சியில், சுகாதார அமைச்சர் பர்சாதி லால் மீனா, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மம்தா பூபேஷ், போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரிஜேந்திர ஓலா, உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ், வனத்துறை அமைச்சர் ஹேமராம் சவுத்ரி, வேளாண்மைத் துறை இணை அமைச்சர் உட்பட கெலாட் கேபினட் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சச்சின் பைலட் புதிய அரசியல் கட்சி தொடங்குவார்  என்ற ஊகங்களுக்கு இந்த பேரணியின் மூலம்  முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ஆனால் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்று அவர் இக்கூட்டத்தில் பேசி இருப்பது சர்ச்சையாகி காங்கிரஸ் மேலிடத்தை மீண்டும் கலக்கம் அடைய செய்து இருக்கிறது.

Tags:    

Similar News